பிஎஸ்என்எல் தொலைபேசி சட்டவிரோத இணைப்புகள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இன்று மனு தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது :-
தயாநிதி மாறன், பிஎஸ்என்எல் இணைப்புகளை அவரது சகோதரர் கலாநிதி மாறனின் சன் குழும நிறுவனத்துக்காக அதிவேக இணைப்புகளை ஒருங்கிணைக்கும் வசதிகள் கொண்ட கருவிகளை அந்நிறுவனம் சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் சட்டவிரோதமாக பயன்படுத்தி உள்ளது மூலம் அரசுக்கு சுமார் ரூ.1.78 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணையின் போது சிபிஐக்கு தயாநிதி மாறன் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மேலும் அவருக்கு முன்ஜாமீன் அளித்தால் வழக்கின் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே, அவரை (தயாநிதி மாறன்) காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் தயாநிதி மாறனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தயாநிதி மாறன் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், வி.கோபால கெளடா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் ஆஜராகி, தயாநிதி மாறன் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் கூடுதல் ஆவணங்கள் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை தொடர்பாக சில விளக்கங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சிபிஐ மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்படுகிறது. அந்த மனுவுக்கு தயாநிதி மாறன் தரப்பில் ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் மீது வரும் நவம்பர் 27-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். அதுவரை தயாநிதி மாறனை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிக்கும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.


