திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல்நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உள்பட மூன்று போலீசாருக்கு, நிபந்தனை ஜாமீன் அளித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த லீலாவதி கொலை வழக்கில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சந்திராவை போலீசார் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கை சிபிஐ நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் ஓராண்டுக்கு பின்னர் கைதான காவல் ஆய்வாளர் விஜயகுமார் உள்பட மூன்று போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மூவரையும் ஜாமீனில் விடுவிக்கக் கோரி கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் ஆய்வாளர் உள்பட மூன்று போலீசாருக்கும் ஜாமீன் வழங்குவதற்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
நாள்தோறும் தலைமை குற்றவியல் மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் அவர்களுக்கு விதிக்கப்பட்டது. பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளில் கைதான போலீசார் மூவருக்கும் பத்தே நாட்களில் ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



