தமிழகத்தில் மாநகராட்சியை கண்டித்து நாளை பா.ஜ.க.வின ர் முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக சென்னை தியாகராயநகரில் உள்ள மாநில தலைமையகமான கமலாலயத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியிருக்கிறது. சென்னை மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. மாநகராட்சி நிர்வாகம் செயலிழந்துவிட்டது. டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் பரவிவருகின்றன. ஆனால், அதுபற்றிய தகவல் மறைக்கப்படுகிறது. டெங்கு நோய் பற்றிய தகவல்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இதுபற்றி மாநகராட்சி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
டெங்கு நோய் பரவுவதை தடுக்க மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. உயிரிழப்புகளை தடுக்க எந்த வகையில் முயற்சி எடுக்கப்பட்டுள்ளன. இதை கண்டிக்கும் வகையில், வரும் 4-ந்தேதி (நாளை) காலை 11 மணிக்கு ரிப்பன் கட்டிடம் முன்பு பா.ஜ.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் போராட்டம் நடத்தியிருக்கிறார். பாடகர் கோவனை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இவர்கள் கட்சியை சேர்ந்த தலைவரை யாராவது கேவலமாக சித்தரித்து பாடியிருந்தால் இப்படித்தான் விடுதலை செய்யக் கூறுவார்களா?.
தமிழகத்தில் 2 திராவிட கட்சிகளுக்கும் மாற்று பா.ஜ.க. தான். மக்கள் நல கூட்டியக்கம் தேர்தல் கூட்டணியாக இன்று மாறியிருக்கிறது. அதில் சில எழுத்துகள் தான் மாறியிருக்கிறது என்றாலும், தமிழகத்தின் தலை எழுத்தை அவர்களால் மாற்ற முடியாது. முதலில் இந்த கூட்டணி தேர்தல் வரை தொடருமா? என்பதே சந்தேகம் தான்.
பா.ஜ.க.வை எங்கள் கூட்டணியில் சேர்க்க மாட்டோம் என்று வைகோ கூறியிருக்கிறார். நாங்களே அவர்களை விரும்பவில்லை. பிரதமர் நரேந்திரமோடியின் நல்ல திட்டங்கள் தமிழகத்தை வந்தடைய தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதை மக்கள் நம்ப தயாராக இல்லை. பா.ஜ.க. கூட்டணியைத்தான் மக்கள் நம்புகிறார்கள் என தமிழிசை சவுந்தரராஜன், கூறினார்.


