நொந்து போயிருக்கிற மக்கள் மீது வரி விதித்து பா.ஜ.க அரசு கஜானாவை நிரப்ப தாக்குதல் : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சற்றுமுன்

 விலைவாசி உயர்வால் நொந்து போயிருக்கிற மக்கள் மீது கலால் வரியை விதித்து அரசு கஜானாவை நிரப்புவது மக்கள் விரோத நடவடிக்கை என்று மத்திய அரசுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது மலிவான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி, ஆட்சியில் அமர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் சாயம் ஒன்றரை ஆண்டு காலத்திலேயே வெளுத்துவிட்டது. சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை மே 2014-ல் காங்கிரஸ் ஆட்சியின் போது 115 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை ரூ.74.60 காசாக இருந்தது. டீசல் விலை ரூ.60.05 ஆக இருந்தது. தற்போது பா.ஜ.க. ஆட்சியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 47 டாலராக குறைந்துள்ளது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை 60 சதவீதம் குறைத்திருக்க வேண்டிய பாரதிய ஜனதா கட்சியின் மோடி அரசு மேலும் 4 முறை கலால் வரியை விதித்து அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.16, டீசலுக்கு 40 காசுகள் கலால் வரி விதித்திருக்கிறது.

கடந்த நவம்பர் முதல் ஜனவரி வரை கலால் வரியை 4 முறை உயர்த்திய காரணத்தினால் ரூ.20 ஆயிரம் கோடி பா.ஜ.க. அரசுக்கு கிடைத்திருக்கிறது. மக்களுக்கு போய்ச் சேர வேண்டிய பயன்களை எல்லாம் கலால் வரி விதித்து அரசு கஜானாவை நிரப்புவதைவிட மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்துபவர்களுக்கு வருமான வரம்பு விதிக்கப்படுவதோடு, கார், இரண்டு சக்கர வாகனம், வீடு வைத்திருக்கிற எவருக்கும் சமையல் எரிவாயு மானியம் வழங்குவது ரத்து செய்யப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். இது ஏற்கனவே விலைவாசி உயர்வால் நொந்து போயிருக்கிற மக்கள் மீது அரசு மிகப்பெரிய தாக்குதலை தொடுத்திருக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை மக்கள் மீது சுமத்தாமல் ஆண்டுக்கு 2 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக மத்திய காங்கிரஸ் அரசு வழங்கி வந்தது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி அரசோ அதை ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்து மக்களின் சுமையை அதிகரித்திருக்கிறது. இந்த நடவடிக்கைகளை மத்திய பாரதிய ஜனதா கட்சி மோடி அரசு திரும்பப் பெறவில்லையெனில் கடும் கொந்தளிப்பான சூழலை மக்களிடையே சந்திக்க நேரிடும் என எச்சரிப்பதாக
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.