நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழா நடந்து வருகிறது. இதில் ஆனித்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். ஆனித்திருவிழா தேரோட்டத்தை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் நெல்லைக்கு வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா இன்று தொடங்குகிறது. அன்று காலை சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து விழா தொடங்குகிறது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடக்கின்றன. கோவில் வளாகத்தில் உள்ள நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பக்தி சொற்பொழிவுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது.