என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் 21-ஆவது புத்தகக் கண்காட்சி கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இன்று தொடங்க உள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கண்காட்சியைத் தொடக்கி வைக்கிறார்.
என்எல்சி இந்தியா நிறுவனம் வளமான தேசத்தை உருவாக்க மின் ஆற்றலை உற்பத்தி செய்வதுடன், சமூக முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 20 ஆண்டுகளாக நெய்வேலியில் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 21-ஆவது புத்தகக் கண்காட்சி நெய்வேலி, வட்டம் 11-இல் உள்ள லிக்னைட் அரங்கில் வருகிற 29-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியில் சுமார் 150 பதிப்பாளர்கள் பங்கேற்று, 160 விற்பனைக் கூடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்களைக் காட்சிப்படுத்த உள்ளனர்.
புத்தகக் கண்காட்சி தொடக்க விழா வருகிற 29-ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கண்காட்சியைத் தொடக்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா மற்றும் இயக்குநர்கள் பங்கேற்கின்றனர்.
ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியிலும் மத்திய, மாநில அரசுகளின் முக்கியப் பிரமுகர்கள் தலைமை விருந்தினர்களாகப் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். சிறப்பு அழைப்பாளர்களில் கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி, விழுப்புரம் சரக காவல் துறை டிஐஜி சந்தோஷ்குமார், கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார், திரைப்படத் தொகுப்பாளர் பி.லெனின், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.



