அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள சைக்கிள் பேரணியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மதுரையில் இன்று தொடங்கி வைக்கிறார்.
அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற உள்ள இந்த சைக்கிள் பேரணி, மதுரை மாவட்டத்தின் 10 பேரவைத் தொகுதிகளிலும் 5 நாள்களுக்கு நடைபெறுகிறது. பேரணியில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு மதுரையில் நடைபெறும் விழாவின்போது புதிய சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்,
ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவும் தாலிக்குத் தங்கம் திட்டத்தில் வழங்கப்படும் தங்கத்தின் எடை 8 கிராம் ஆக உயர்த்தப்பட்டது, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கியது, ஜல்லிக்கட்டு நடத்த சட்டப் பூர்வ அனுமதி பெற்றது, நீர்நிலைகளைப் பாதுகாக்கும் குடிமராத்து, காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்கு சாதகமான முடிவு கிடைத்தது, எய்ம்ஸ் மருத்துவமனை, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை மூடியது எனப் பல்வேறு சாதனைகளை தமிழக அரசு செய்து வருகிறது.
இவற்றை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் நடத்தப்படும் சைக்கிள் பேரணியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வரும் இன்று தொடங்கி வைக்கிறார்.
தினமும் 2 பேரவைத் தொகுதிகள் என 5 நாள்களுக்கு மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் பேரணி நடத்தப்படும். ஒவ்வொரு நாள் இரவும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். மதுரையைத் தொடர்ந்து அடுத்தடுத்து அனைத்து மாவட்டங்களிலும் இப்பேரணி நடத்தப்படும். மக்களவைத் தேர்தல் பணியின் தொடக்கமாகவே இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மதுரை மாவட்டத்தில் தொகுதிக்கு தலா 100 பேர் வீதம் ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர் என்றார்.



