மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக, நேற்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தன. இதன்மீதான விவாதம் நாளை நடைபெற உள்ளது. விவாதத்தைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கையில், “சர்வாதிகாரத்தின் முள்ளாசனத்தில் அமர்ந்துகொண்டு ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை எல்லாம் தோற்கடித்து, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு மாபெரும் இழுக்கை ஏற்படுத்தியுள்ள பாரதீய ஜனதா கட்சி அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும், தார்மீக அடிப்படையில் தி.மு.க-வின் முழுமனதான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மக்களவையில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். பாரதீய ஜனதா கட்சி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்திருக்கும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம், நாடாளுமன்ற ஜனநாயகத்திலும், இந்துத்துவாவின் பிளவுபடுத்தும் பிற்போக்கு அரசியலுக்கும் எதிரான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையிலும், ஒற்றைச் செயல் திட்டத்தை நிறைவேற்றிடும் நோக்கத்திலும், ஆக்கபூர்வமான திருப்புமுனை அமையும் என்று நாடெங்கிலும் எதிர்பார்க்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.



