ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் இரண்டு சிறுத்தைகள் கொஞ்சி விளையாடி சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பினர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் உள்ள திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. வனத்துறையினரும் ஆங்காங்கே சிறுத்தைகள் நடமாடும் பகுதி என்ற வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் 2 சிறுத்தைகள் திம்பம் மலைப்பாதை 5 வது கொண்டை ஊசி வளைவு அருகே நடமாடியதோடு சாலையின் நடுவே படுத்துக் கொண்டு கொஞ்சி விளையாடியபடி சண்டையிட்டுள்ளன.
இதைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலையில் நிறுத்தியபடி செல்போனில் படம்பிடிக்க ஆர்வம் காட்டினர். இது குறித்து தகவலறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகன ஓட்டிகளை எச்சரித்தனர்.
இதை அடுத்து 2 சிறுத்தைகளும் மெதுவாக எழுந்து சாலையிலிருந்து வனப் பகுதிக்குள் ஓடி மறைந்தன. பகல் நேரத்தில் சிறுத்தைகள் சாலையில் சண்டையிட்ட காட்சி வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திம்பம் மலைப்பாதை வழியாக பயணிப்போர் மலைப்பாதையில் இறங்கி நிற்பது, சாலையோர தடுப்புச் சுவரில் அமர்ந்து உணவருந்துவது, புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகளிடம் வனத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.




