பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
சுங்க கட்டணத்தை குறைத்தல், பெட்ரோல் மற்றும் டீசல் வரியை 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
இதனால் நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் இயங்காது என்றும், தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் இயங்காது என்றும் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால், பல கோடி ரூபாய் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை 3 மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயிப்பதோடு ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும், மோட்டார் வாகனங்களுக்கான 3-ம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



