சென்னை: தமிழகத்தில் அண்மைக் காலமாக நெருக்கடிகளுக்கு உட்பட்டு, அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கள மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த முத்துக் கிருஷ்ணன் நேற்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதேநாளில் கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் நியாவிலைக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் சக்திவேல் என்பவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரிகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அரசு ஊழியர்களின் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி பேரதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. திருவாரூரில் தற்கொலை செய்து கொண்ட முத்துகிருஷ்ணன் அளித்த மரண வாக்குமூலத்தில் தமது உயரதிகாரியின் கொடுமையைத் தாங்க முடியாமல் தான் இந்த முடிவைத் தேடிக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார். அதேபோல், தமது தற்கொலை முயற்சிக்கு அ.தி.மு.க. நிர்வாகியின் கொடுமையே காரணம் என்று சக்திவேல் தெரிவித்துள்ளார். அரசு பணிகளுக்கு இலக்கு நிர்ணயிக்காத அமைச்சர்களும், ஆளுங்கட்சியினரும் தங்களுக்கு மாதம் இவ்வளவு ரூபாய் கப்பம் கட்ட வேண்டும் என்று ஊழலுக்கு இலக்கு நிர்ணயித்து உயரதிகாரிகளுக்கு நெருக்கடி தருவதால், உயரதிகாரிகளும் தங்களுக்கு கீழ் பணியாற்றுவோரை ஊழல் செய்யும்படி கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி, பொது சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் அறிவொளி உள்பட பத்துக்கும் மேற்பட்டோர் கடந்த ஓராண்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அதிகாரி நேரு உள்ளிட்ட பல அதிகாரிகள் தற்கொலைக்கு முயன்றிருக்கின்றனர். அரசு அலுவலகங்களில் கடுமையான மன அழுத்தத்துடன் பணியாற்ற வேண்டியிருப்பதால் தூக்கமின்மை போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கும், மாரடைப்பு, சர்க்கரை நோய் போன்ற அழுத்தம் சார்ந்த நோய்களுக்கு ஆளாகிறார்கள். அரசு நிர்வாகம் சுமூகமாக நடைபெறத் தேவையான பணிச் சூழலை ஏற்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும். அனைத்து துறைகளிலும் ஊழல் செய்யத் துடிக்கும் தமிழக ஆட்சியாளர்களால் அரசு நிர்வாகம் நாளுக்குநாள் சீரழிந்து வருகிறது. அமைச்சர்கள் தொடங்கி வட்டச் செயலாளர்கள் வரை அனைவரும் தங்கள் நிலையிலுள்ள அரசு ஊழியர்களை விதிகளை மீறி செயல்படும்படி மிரட்டுகிறார்கள். திருச்சி மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி நேரு, கோவை நியாயவிலைக்கடை ஊழியர் சக்திவேல் ஆகியோர் அளித்த வாக்குமூலங்கள் இதை உறுதி செய்கின்றன. இதனால் ஒரு காலத்தில் வரமாக இருந்த அரசு வேலை சாபமாக மாறி வருகிறது. தமிழகத்தில் அதிமுக அரசு தற்கொலைகளின் அரசாக மாறி வருகிறது. இதேநிலை நீடித்தால் நேர்மையான, உண்மையான மனிதர்கள் எவரும் அரசு பணிக்கு வர மாட்டார்கள். ஏற்கனவே அரசு பணியில் இருக்கும் நேர்மையான அதிகாரிகள் கூட ஊழல்வாதியாக மாற நேரிடும் அல்லது கடுமையான மன அழுத்தத்தில் சிக்கி நடைபிணமாக வாழ வேண்டியிருக்கும். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இதற்காக, அரசு நிர்வாகத்தை வளைக்க நினைப்பவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும், ஆளுங்கட்சி கவுன்சிலர்களாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அரசு நிர்வாகத்தில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் எவரும் தலையிட மாட்டார்கள் என்று தமிழகத்தை ஆளும் கட்சி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நிர்வாகத்தில் ஆளுங்கட்சியினரின் குறுக்கீடுகள் ஒருபோதும் இருக்காது என்று அதிகாரிகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நடந்த தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் குறித்து விரிவான விசாரணை நடத்த மேதகு தமிழக ஆளுனர் அவர்கள் ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, இதற்கு காரணமாக இருந்தவர்களையும் ஆளுனர் தண்டிக்க வேண்டும்
அதிகாரிகள் தற்கொலைகளைத் தடுக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari