ரயில்களில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்தால் ரயில்வே பாஸை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னையில் ரயில் பாதுகாப்புப் படை ஆணையர் லூயிஸ் அமுதன் தெரிவித்துள்ளார்.
சென்னை மின்சார ரயில் நிலையங்கள் அனைத்தும் காலை முதலே பெரும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். அப்படியிருக்கும்போது, கடந்த ஜூலை 24-ம் தேதி, கோடம்பாக்கம் அருகே உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து விழுந்ததால் அதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதனால், சென்னை பீச்சில் இருந்து திருமால்பூர் வரை செல்லும் மின்சார புறநகர் விரைவு ரயில் தாமதமாக வந்துள்ளது. இதனால், நீண்ட நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பயணிகளின் கூட்டம் அதிகரித்திருந்தது.
பிறகு வந்த ரயிலில் நிற்கக்கூட இடமில்லாத அளவு பயணிகள் நிரம்பி வழிந்துள்ளனர். பரங்கிமலை ரயில் நிலையத்தில் எப்போதும் செல்லவேண்டிய தடத்தில் செல்லாமல், மாற்றி எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் இயக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக பல இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் கம்பிகளில் தொங்கியபடி பயணித்துள்ளனர். அவர்கள், சரியாக பரங்கிமலை ரயில் நிலையத்தைக் கடக்கும்போது, அங்கிருந்த தடுப்புச் சுவரின்மீது மோதிக் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தை தொடர்ந்து பல்வேறு பாதுக்காப்பு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இது குறித்து பேசிய ரயில் பாதுகாப்புப் படை ஆணையர் லூயிஸ் அமுதன், ரயில்களில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்தால் ரயில்வே பாஸை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.