பால் முகவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடுங்கள் என்று தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை (10.09.2018) அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திமுக, கம்யூனிஸ்ட்உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையும் ஆதரவு தெரிவித்திருந்தாலும் கூட *பொதுமக்கள் நலன் கருதி இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் ஆதரவளிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளைய தினம் பொதுமக்களுக்கு பால் தங்கு தடையின்றி விநியோகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்திருப்பதால் அக்கட்சிகளைச் சார்ந்த வட்டம், பகுதி பிரதிநிதிகள் நாளைய தினம் பால் முகவர்களையும், வணிகர்களையும் கடைகளை அடைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தலாம். கடைகளை அடைக்க மறுக்கும் பால் முகவர்கள், வணிகர்கள் தாக்கப்படும் சூழல் ஏற்படும் என்கிற எண்ணம் பெரும்பாலான வணிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
எனவே நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் போது தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள் பாலினை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி விநியோகம் செய்திட ஏதுவாக அவர்களின் விநியோக மையங்களுக்கும், பாலினை விநியோகம் செய்கின்ற வாகனங்களுக்கும் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிடுமாறு தமிழக அரசையும், தமிழக காவல்துறை தலைவர் மற்றும் காவல் ஆணையாளர் ஆகியோரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் நாளைய தினம் தமிழகம் முழுவதும் தங்குதடையின்றி பாலினை விநியோகம் செய்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து பொதுமக்களுக்கு பால் உரிய நேரத்தில், தடையின்றி கிடைப்பதை பால் முகவர்கள் அனைவரும் உறுதி செய்யுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதோடு பால் முகவர்கள் அனைவருக்கும் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்… என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் சு.ஆ.பொன்னுசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.




