திருநெல்வேலி: தாமிரபரணியில் நெல்லை நகர்ப் பகுதியில் உள்ள முக்கியமான இரு படித்துறைகளில், புஷ்கர விழா நடத்துவதற்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள், தைப்பூச மண்டபத்துக்கு பூட்டுப் போட்டு பூட்டினர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று முன்னரே அறிவித்தபடி, பூட்டை உடைக்கும் போராட்டத்தை மேற்கொள்ள இந்துமுன்னணியினர் தைப்பூச மண்டபத்துக்கு வந்தனர். அவர்களிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் சமரசம் பேசினர்.
தாமிரபரணியில் மகாபுஷ்கர விழா வரும் அக்.,11 முதல் 23 வரையிலும் நடக்கிறது. 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் விழா என்பதால் தாமிரபரணியில் நீராட நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வர உள்ளனர்.
தாமிரபரணி நதி உற்பத்தியாகும் பாபநாசம் முதல், கடலில் கலக்கும் புன்னக்காயல் வரையிலும் பல்வேறு தீர்த்தங்களில் இதற்கான பணிகள் நடந்துவருகிறது. பல்வேறு குழுக்கள் படித்துறைகளை சீரமைத்து வருகின்றனர். அரசு சார்பில் நெல்லை ஆட்சியர் ஷில்பா தலைமையில் ஒரு முறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு வேறு எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனிடையே நெல்லை அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணிக்கரையில் உள்ள முக்கியமான அனைத்து கோயில்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் தாமிரபரணியில் புஷ்கர விழா நடத்துவதற்கு அனுமதி கேட்டுள்ளனர். குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிக்கு செல்லும் பாதை போதுமான வசதிஇல்லை. அங்கு அதிகமான பக்தர்கள்கூடுவதற்கும் இடவசதியில்லை.
பருவ மழை காலத்தில் தாமிரபரணியில் அதிக தண்ணீர் செல்லும்போது நீராடுபவர்களை பாதுகாப்பதும் சிரமம். நெரிசலான அங்கு புஷ்கர விழா நடத்த இயலாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் தைப்பூச மண்டபம் பகுதியிலும் தாமிரபரணி ஆழமாக உள்ளது. அங்கு நீர்ச்சுழல் இருப்பதால் பலர் மூழ்கி இறந்துள்ளனர்.அங்கு நீராடுவதற்கு ஏற்ற இடம் இல்லை.
எனவே கலெக்டரின் உத்தரவின்படி கோயில் மண்டபங்கள், படித்துறைகளை புஷ்கர விழாவிற்கு வழங்கவேண்டாம் என கோயில் நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
மேலும் புஷ்கர விழாவிற்காக கோயிலில் இருந்து சுவாமியை எழுந்தருள செய்வது ஆகம விதிகளுக்கு மாறானதாகும் எனவும் இணை ஆணையர் தெரிவித்துள்ளார். கலெக்டர் ஆலோசனையின் பேரில், புஷ்கர விழாவிற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவேண்டாம் என அறநிலையத்துறை இணை ஆணையரின் சுற்றறிக்கை, புஷ்கர விழாவிற்கு ஏற்பாடு செய்து வருபவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, அனைத்து படித்துறைகளும் அல்ல.. நெல்லை மாநகரத்தில் உள்ள இரு படித்துறைகளுக்கு மட்டுமே தடை என்று ஆட்சியர் அறிவித்தார். அதையே அறநிலையத்துறை அதிகாரிகளும் வழி மொழிந்தனர்.
இந்நிலையில் ஆட்சியரின் உத்தரவின் பேரில், தைப்பூச மண்டபத்துக்கு இரு தினங்களுக்கு முன்னர் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டது. இது, வழக்கமாக தாமிரபரணி ஆற்றில் நீராடச் செல்லும் அன்பர்களை கடும் கொதிப்புக்கு உள்ளாக்கியது. தைப்பூச மண்டபத்துக்கு பூட்டுப் போட்டு பூட்ட, இவர்கள் யார் என்று கேள்வி எழுப்பிய இந்து அமைப்பினர், பூட்டை உடைக்கும் போராட்டத்தை அறிவித்தனர்.
இதன்படி, இன்று மாலை தைப்பூச மண்டபத்தில் பூட்டு போட்டு பூட்டிய அற நிலையத் துறையின் அராஜகப் போக்கைக் கண்டித்து பூட்டை உடை போராட்டத்தை நடத்த வந்தனர் ஹிந்து முன்னணியினர். அவர்களிடம் தாசில்தார், காவல்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், தாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் பேசி தைப்பூச மண்டபத்தில் மஹா புஷ்கர விழா நடத்த உதவுவதாக சமரசம் பேசினர். இதை அடுத்து ஹிந்துமுன்னணியினர் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.