அதிமுக ஆட்சி செயலிழந்த ஆட்சியா? முடிந்துபோன ஆட்சியா? காலாவதியான ஆட்சியா? : விஜயகாந்த்

 
அதிமுக ஆட்சி செயலிழந்த ஆட்சியா? முடிந்துபோன ஆட்சியா?  காலாவதியான ஆட்சியா? என்று தமிழக மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஜெயலலிதா பதில் சொல்லவேண்டும் என்று தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஜெயலலிதாவுக்கு அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்ததுள்ளார்.
 
மேலும் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.
 
அதிமுக, திமுக ஆட்சியில் சீர்மிகு சென்னையாக்குகிறேன், சிங்கார சென்னையாக்குகிறேன் என்று வார்த்தை ஜாலம் பேசி, உலக நாடுகளிடம் கையேந்தி பெற்ற நிதியெல்லாம் வீணாகிப்போய், இன்று தமிழகம் சுமார் 4 லட்சம் கோடிக்கு மேல் கடனில் சிக்கித்தவிப்பதுதான் மிச்சம். இரண்டு ஆட்சியிலும் கூவம் ஆறு, அடையார் ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை முழுமையாக தூர்வாரப்பட்டதாகவோ, சுத்தம் செய்யப்பட்டதாகவோ தெரியவில்லை.
ஆட்சியாளர்கள் செய்யத் தவறியதை சென்னைவாழ் மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்திய மழை வெள்ளம் செய்துள்ளது. மூன்று ஆறுகளையும் சுத்தப்படுத்தி, கரையோரமிருந்த ஆக்கிரமிப்புகளை கபளீகரம் செய்துள்ளது. சோகமான நிலையில் இயற்கை கொடுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையில் தடுக்கவேண்டிய பொறுப்பும், கடைமையும் அதிமுக அரசுக்கு இருக்கிறது.
 
சென்னை மாநகரத்திற்குள் அரசுக்கு சொந்தமான பல இடங்கள் உபயோகமற்று இருக்கிறது. ஆற்றங்கரையோரம் வசித்த ஏழை மக்களை அந்த இடத்திற்கு மாற்றம் செய்து, அவர்களுக்கு அரசு சார்பில் வீடுகளை கட்டிக் கொடுக்கவேண்டும்.
 
மேலும் சென்னையை சுற்றி ஓடுகின்ற ஆறுகளில் சேறுகளும், சகதிகளும் சுமார் ஐந்து முதல் பத்தடி வரை தேங்கியுள்ளன. அவற்றை போர்க்கால அடிப்படையில் தூர்வாருதல் மூலம் அகற்றி, ஆற்றின் இரு கரையோரமும் தடுப்புச் சுவர்களையும், ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளையும் அமைத்து, அதில் கழிவுநீர் கலப்பதையும் தடுக்கவேண்டும். இதைச் செய்வதால் வரும் காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் மக்களை காப்பாற்ற முடியும். சென்னையின் குடிநீர் தேவையும் தீரும்.
 
பசியோடு இருப்பவருக்கு மீனை உணவாக கொடுப்பதைவிட, மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பதே அவருக்கு செய்யும் உதவி என்பார்கள். அதுபோல பாதித்த பிறகு நிவாரணம் வழங்குவதை விட, பாதிப்பே இல்லாமல் செய்வதுதான் மக்கள் நலனை விரும்பும் அரசுக்கு அடையாளமாகும்.
 
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை. நிவாரண பணிகளில் விநியோகம் செய்யும் முறை சீராக இல்லை. பல இடங்களுக்கு நிவாரண உதவிகள் இன்னும் போய்ச்சேரவில்லை. எனவே உடனடியாக சீர்படுத்த அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
சென்னைக்கு கப்பலில் வந்துள்ள நிவாரண பொருட்களை எடுத்துச்செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், தமிழகத்திற்கு உதவி செய்ய வந்துள்ள இராணுவத்தினரை ஒருங்கிணைத்திடவோ வழிகாட்டிடவோ ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் செய்திகள் வருகின்றன. இவ்வளவு மோசமான நிர்வாக சீர்கேட்டை தமிழகம் பார்த்ததில்லை. முதலமைச்சர் – அமைச்சர், மேயர் – கவுன்சிலர் என ஒருவருக்கு ஒருவர் தகவல் தொடர்பில்லாமல் இருப்பதாகவும், அதனால் அதிகாரிகள் செய்வதறியாது திணறுவதன் வெளிப்பாடே இந்த நிலைக்கு காரணமென மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
 
பல்வேறு துன்பங்களை மக்கள் அனுபவித்து வரும் இந்த வேளையில்கூட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவோ, அமைச்சர்களோ நிவாரண பணிகளில் மெத்தனமாக இருந்துகொண்டு, மக்களிடத்தில் பேசமறுத்து, மௌனம் காப்பது ஏன்?
 
சென்னை மேயரும் பேசமறுகிறார், மேயருக்கு அதிகாரம் இல்லையா? மேயருக்கு பதிலாக வேறு நபர் அதிகாரத்தில் இருக்கிறாரா? இவர்கள் அனைவருமே மௌனமாக இருந்துவிட்டால், அனைத்து பிரச்சனைகளும் முடிந்துவிடும் என்று நினைத்துவிட்டார்களா? அப்படியானால் அதிமுக ஆட்சி செயலிழந்த ஆட்சியா? முடிந்துபோன ஆட்சியா? காலாவதியான ஆட்சியா?
என்று தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இதற்காவது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பதில் சொல்லவேண்டு என்று கேட்டுக்கொள்வதாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.