தே.மு.தி.க. சார்பில் துப்புரவு பணிகள் : விஜயகாந்த்

சென்னை:

தே.மு.தி.க. சார்பில் சென்னையில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப் படும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகள் குப்பை கூளங்களும், சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. அ.தி.மு.க. அரசோ ஆயிரக்கணக்கான துப்புரவு பணியாளர்களைக் கொண்டு, சென்னையை சுத்தம் செய்வதாக வெற்று அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. ஆனால் பல இடங்களில் சுகாதார சீர்கேட்டால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

இனியும் அ.தி.மு.க. அரசையோ, சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையோ நம்பி பிரயோஜனம் இல்லை. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆர்.கே.நகர் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதுபோன்று சென்னை மாநகராட்சியிலுள்ள 200 வட்டங்களிலும் தே.மு.தி.க. மக்களுடன் இணைந்து, மக்களுக்காக மக்கள் பணியை செய்ய திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மக்களுடன் இணைந்து தே.மு.தி.க.வினர் துப்புரவு பணியில் ஈடுபட உள்ளனர். அரசியலுக்கு அப்பாற்பட்டு, மனித நேயத்தோடு பொதுமக்களும், இளைஞர்களும், மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் தே.மு.தி.க.வினருடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

– என்று கூறியுள்ளார்.