வடகிழக்குப் பருவமழை மீண்டும் தாமதமாகத்தான் தொடங்குகிறது என்று கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.
அடுத்த மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட வட தமிழகத்துக்கு பெரும் மழைப் பொழிவையும் நீர் ஆதாரத்தையும் தருவதாக வடகிழக்குப் பருவமழையே திகழ்கிறது. எனவே மழையை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் சென்னைவாசிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், முன்னர் குறிப்பிட்ட நாளில் இருந்து தாமதமாகத்தான் வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது என்று கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜான்.
இது குறித்து அவர் பதிவு செய்துள்ள தகவல்…
அக்டோபர் 26 அன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த வடகிழக்கு பருவமழை துவங்குவதில் மீண்டும் ஒரு முறை தாமதம் ஏற்பட்டுள்ளது. காற்றின் மேல் அடுக்கில் காற்றின் திசை சாதகமாக இல்லாத காரணத்தால் , இன்னும் ஒரு வார காலம் காத்திருக்க வேண்டும்..
பருவ மழை மட்டுமே நமக்கு கிடைக்க வேண்டிய மழை அளவை தீர்மானிக்கும் காரணி அல்ல.. மழையின் பெரும் பகுதி காற்றின் மேலடுக்கு சுழற்சி மற்றும் தாழ்வு அழுத்தங்கள் உருவாவதை பொறுத்தே அமையும்.. அடுத்து நவம்பர் மாதத்தில் உருவாக உள்ள வடகிழக்கு பருவமழையின் முதல் காற்றழுத்தம் மீண்டும் ஒரு முறை ஒடிசா மாநிலத்தை நோக்கி நகரவே வாய்ப்பு அதிகமாக உள்ளது.. எனினும் குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் பருவ மழையில் இரண்டு அல்லது மூன்று தாழ்வு நிலைகளே போதுமான மழையை கொடுக்க வல்லது..
வடகிழக்கு பருவமழை குளிர் காலத்தில் பெய்யும் மழையே..எனவே பனிமூட்டம் ஏற்படுவது இயற்கை நிகழ்வு மட்டுமே.. இதனால் மழை குறைய வாய்ப்பு இல்லை.
முன்னறிவிப்பு:
அக்டோபர் மாதம் இறுதி வரை தென் கடலோர மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, குமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.. மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும்.. வட உள் மாவட்டங்களில் இரவு அல்லது அதி காலையில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும்..
நவம்பர் முதல் வாரத்தில் கடலோர மாவட்டங்களில் துவங்கும் மழை பிற்பகுதியில் உள் மாவட்டங்களில் பரவ ஆரம்பிக்கும்.. இவை அனைத்தும் தற்போதைய நிலவரப்படி கணிக்கபட்டவை மட்டுமே.. இவற்றில் மாற்றம் நிகழலாம்..




