கல்வியை கடை சரக்காக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட கூடாது : கருணாநிதி வலியுறுத்தல்

 
கல்வியை கடை சரக்காக்கும் உலக வர்த்தக அமைப்பு உடன்பாடு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
 
கருணாநிதி வெளியிட்டுள் அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.
 
உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளை சோந்த வர்த்தக அமைச்சர்களின் மாநாடு கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் சேவைத்துறையில் வர்த்தகம் பற்றிய பொது உடன்படிக்கையில் இந்தியா தற்போது கையெழுத்திடும் அபாயம் உள்ளது. அந்த உடன்படிக்கை ஒப்பந்த வடிவம் பெறுமானால் இனிமேல் உயர்கல்வி வணிகமயமாகிவிடும்.
 
இந்திய உயர்கல்வியில் வெளிநாடுகளின் மேலாதிக்கம் அதிகரிக்கும் என்று கருணாநிதி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்திய கல்வி துறையில் இப்போதே தனியாரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் உயர்கல்வியில் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களையும் அனுமதித்தால் கல்வி சேவை என்பது மாறி சந்தை பொருட்களில் ஒன்றாகிவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கல்வி, வணிகம் செய்ய வரும் போது இட ஒதுக்கீடு, கல்வி உதவி தொகை, இந்திய மொழிகள் ஆகியவற்றுக்கு பாதகம் ஏற்படும் என்று கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார். கல்வியை கடை சரக்காக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட கூடாது என்று பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்த போதிலும் மத்திய பாஜக அரசு அதனை காதில் போட்டுக்கொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
 
நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி இப்படிப்பட்ட ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திடுவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகும். மத்திய பாஜக அரசு இந்த ஒப்பந்தத்தில் இருந்து விடுவித்து கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.