மதுரை:
நடிகர் கமல்ஹாசன் புதன்கிழமை இன்று புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி வைத்தார். மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் தனது அரசியல் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து ‘மக்கள் நீதி மய்யம்’ என்று கட்சிப் பெயரையும் அறிவித்தார். இந்த விழாவில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், கமல்ஹாசன் நேர்மையானவர் மட்டும் இல்லை, துணிச்சலானவரும் கூட! கடந்த சில மாதங்களாக கமல்ஹாசன் காட்டிய துணிச்சலைப் பார்த்து வியந்தேன். சிறந்த நடிகரான கமல் உண்மையான ஹீரோவாக உள்ளார். தில்லியில் நேர்மையான ஆட்சி நடைபெற்று வருகிறது. தில்லி மக்களைப் போல தமிழக மக்களும் வரலாற்றை மாற்றி அமைப்பார்கள். இந்த சாதனையை தமிழகத்தில் கமல் செய்து முடிப்பார்.
தமிழக மக்கள் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு இடையே சிக்கிக் கிடந்தனர். தமிழகத்தில் தற்போது நேர்மையான அரசியல் கட்சி உருவாகியுள்ளது. ஊழலை ஆதரிப்பவர்கள் திராவிட கட்சிகளை ஆதரியுங்கள், கல்வி நிலையம் வேண்டும் என்பவர்கள் கமலை ஆதரியுங்கள். தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர்… என்று பேசினார்.
முன்னதாக, தனது கட்சி பெயர், கட்சி கொடியை அறிமுகப்படுத்தி நடிகர் கமல் பேசியபோது, 37 ஆண்டுகளாக அமைதியாக நற்பணியை செய்து கொண்டிருந்த கூட்டத்தின் ஒரு பகுதிதான் இது. கடந்தவை கடந்தவைகளாக இருக்கும்; ஆனால் மறந்தவையாக இருக்காது. இங்கு எங்கள் தண்டவாளமும், உங்கள் வண்டவாளமும் வெளியே வரும் நாள்.
இந்த அநீதிகளைப் பார்த்துக் கொண்டு நாம் எத்தனை காலம் அமைதி காப்போம். மக்கள் நலனே எனக்கு பிரதானம். இங்கு பணத்திற்கு பஞ்சமில்லை. இங்கு நல்ல மனத்திற்கு தான் பஞ்சம். நாம் துவங்கியிருக்கும் நியாயப் போரின் தமிழர்படை தான் இது. நல்ல முதல்வர்களுக்கு இருக்கும் கொள்கை தான் எனக்கு உண்டு. நான் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன். எனக்குப் பிறகும், நாலைந்து தலைமுறைக்கு இந்தக் கட்சி இருக்க வேண்டும்.
பேச்சுவார்த்தை நடத்தினால் காவிரி தண்ணீர் நமக்கு கிடைக்கும். சிலர் தான் பிரச்னையை துாண்டி விடுகின்றனர். பணம் வாங்கிவிட்டு ஓட்டுப்போட்டால், அவர்களை நீங்கள் கேள்வி கேட்க முடியாது. என்று பேசினார்.



