செங்கோட்டை பார்டடரில் உள்ள பிரபல புரோட்டா கடையில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை பிரானூர் பார்டர் பகுதியில் உள்ளது பிரபலமான ரஹ்மத் புரோட்டா கடை. இந்த புரோட்டா கடைகளில், குற்றால சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில் இந்த கடையில் முறைகேடுகள் நடப்பதாகவும், முறையான கணக்குகளை காட்டாமல் இருப்பதாகவும் வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வரவே, இன்று மதியம் 3 மணிக்கு 5க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் குழு புரோட்டா கடையில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையின் போது கடைக்குள் வாடிக்கையாளர்கள் யாரையும் உள்ளே விடவில்லை. முன்னதாக கடைக்குள் புகுந்த வருமான வரிதுறை அதிகாரிகள் கடையின் கேட்டை இழுத்து சாத்திக் கொண்டனர். இதனால் கடைக்கு மதியம் சாப்பிட வந்த வாடிக்கையாளர்கள் சாப்பிட முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர்.
மேலும் செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தில் ரஹ்மத் புரோட்டா கடையின் உரிமையாளர்கள் மற்றும் அவரது 2 சகோதரர்கள் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.



