ஆக்கிரமிப்பு குறித்து கருணாநிதி பேச மறுப்பது ஏன்? : ஜி.ராமகிருஷ்ணன்

 
திமுக தலைவர் கருணாநிதி நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து பேச மறுப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-
 
ஆளுங்கட்சியின் தவறுகளை தட்டிக் கேட்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எப்போதும் தயங்கியதில்லை. திமுகவுடன் தேர்தல் உடன்பாடு கண்ட காலத்திலேயே கூட தவறுகளை சொல்லுகிற நேர்மையும், துணிவும் வெளிப்பட்டது. வெள்ள பாதிப்புக்கு அதிமுக அரசே காரணம் என்பதையும் தெரிவித்துள்ளோம்.
 
இதையும் தாண்டி கூவம், அடையாறு உள்ளிட்ட நீர் நிலைகள் பல அரசியல் செல்வாக்குள்ள நபர்களின் கல்வி நிறுவனங்களாகவும், வீடுகளாகவும், கேளிக்கை விடுதிகளாகவும், பெருநிறுவனங்களின் அலுவலகங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. இதனால் ஆறுகளின் கொள்ளளவும், போக்கும் மாறியிருப்பது ஓர் அடிப்படைக் காரணம். இவையனைத்தும் கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டுமே நடந்தது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறகிறாரா?
 
திமுக ஆட்சியிலும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புகள் அதிகாரத்தில் இருந்தோரால் செய்யப்பட்டிருக்கிறது என்பதை அவரால் மறுக்க முடியாது. ஆ கவே தான் அவர் ஆக்கிரமிப்புகள் பற்றிப் பேச மறுக்கிறார் என்று ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.