நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு : காவலர் பலி

 
 
 
புது தில்லியில் உள்ள கர்கர்தூமா நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக் கைதியை பழிக்குப் பழியாக சுட்டுக் கொலை செய்யப்பட்டதில் காவலர் ஒருவர் பலியானார்.
 
இதனிடையே தாக்குதலில் இறந்த காவலர் ராம் குமாரின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
 
பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் இர்பான் என்ற ஷைனி பேகல்வன். கிழக்கு தில்லியில் உள்ள கர்கர்தூமா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்காக இர்பானை, தில்லி மூன்றாவது சிறப்புப் படையில் பணியாற்றும் காவலர் ராம் குமார் அழைத்து சென்றார்.
 
இருவரும் இன்று காலை 11 மணிக்கு நீதிமன்றத்தில் காத்திருந்தபோது, இர்பானை கொலை செய்யும் நோக்கில் அங்கு வந்த ஒரு கும்பல் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இர்பானும், காவலர் ராம் குமாரும் படுகாயமடைந்தனர்.
 
இருவரும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் ராம் குமார், வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். குமாரின் உடலில் 4 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததாக போலீஸார் கூறினர். இர்பான் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
 
இச்சம்பவம் குறித்து துரித விசாரணை நடத்திய புது தில்லி காவல் துறையினர், சீலம்பூர் அருகே 4 இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் விசாரணைக் கைதி இர்பான், தாக்குதல் நடத்தியவர்களின் குழுவைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்திருப்பதும், பழிக்குப் பழியாக அவர்கள் இர்பானை கொல்ல முயற்சித்ததும் தெரிய வந்தது.
 
பாதுகாப்பு மிகுந்த நீதிமன்ற வளாகத்துக்குள் தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் எவ்வாறு நுழைந்தனர் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாக்குதல் சம்பவத்தை காணொளி எடுத்த முக்கிய குற்றவாளி ஒருவரையும்காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
 
இத்தாக்குதல் சம்பவத்தில் முதன்மை நீதிபதி சுனீல் குப்தா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.