தமிழக ஆளுநர் ரோசைய்யா இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் திடீர் சந்திப்பு

 
 
தமிழக ஆளுநர் ரோசைய்யா இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை இன்று சந்தித்துப் பேசினார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மெடக் மாவட்டம் எர்ரவள்ளி கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தனது சொந்தப் பணம் ரூ.20 கோடி செலவில் மகாசண்டியாகம் நடத்தி வருகிறார். கடந்த 23–ந்தேதி தொடங்கிய இந்த யாகம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
 
2 ஆயிரம் பண்டிதர்கள் இந்த யாகத்தை நடத்துகிறார்கள். இந்த யாகத்தில் சந்திரசேகர ராவ் தனது மனைவியுடன் தினமும் கலந்து கொள்கிறார். மேலும் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்கிறார்கள்.
 
மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர்ராவ் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். மேலும் சிருங்கேரி மடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகள், ராம்பூர் மடாதிபதி மாதவானந்தா சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீபீட மடாதிபதி பரிபூரனாந்தா சுவாமிகள், திரிதண்ட மடாதிபதி சின்ன ஜீயர் ஆகியோரும் பூஜையில் கலந்து கொண்டனர். அவர்களிடம் சந்திரசேகர ராவ் ஆசி பெற்றார். அதோடு தினமும் குங்கும பூஜை நடக்கிறது.
 
நேற்று நடைபெற்ற யாகத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தமிழ்நாடு கவர்னர் கே.ரோசைய்யா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டி.சுபிராம ரெட்டி, ஆந்திர முன்னாள் மந்திரி கீதா ரெட்டி, ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி எஸ்.வி.ரமணா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
ஒவ்வொரு நாள் பூஜையிலும் 6 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்கிறார்கள். பூஜையில் பங்கேற்கும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், புடவை, ஜாக்கெட், மகாசண்டி டாலர் போன்ற மங்கள பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் தினமும் பெண்கள் கூட்டம் கூட்டமாக யாக பூஜைக்கு வருகிறார்கள். அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்படுகிறது. யாகத்தில் பங்கேற்பவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணத்தில் ஆடை அணிகிறார்கள்.
 
முதல் நாள் மஞ்சள் ஆடையிலும் அடுத்த நாள் ரோஸ் வண்ண ஆடையிலும் அனைவரும் பங்கேற்றனர். நேற்று வெள்ளை ஆடையில் அனைவரும் காட்சி அளித்தனர். சந்திரசேகர ராவ் கூட இதே வண்ணத்தில் ஆடை அணிந்து இருந்தார். பத்திரிகையாளர்களுக்கு கூட இதே ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது, இன்றுடன் (27–ந்தேதி) இந்த சண்டி யாகம் நிறைவு பெறுகிறது.
 
இன்றைய பூஜையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். இதற்காக, தெலுங்கானாவுக்கு வந்துள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தமிழக ஆளுநர் ரோசைய்யா மரியாதை நிமித்தமா இன்று சந்தித்துப் பேசியதாக சென்னை மாளிகை வட்டார தகவல் கூறுகிறது.