தேமுதிக கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தும் பத்திரிகைகள் மீது நடவடிக்கை : விஜயகாந்த்

தேமுதிக ஆதரவு பத்திரிகைகள் என்று எதுவும் இல்லை என்றும், கட்சி பெயரை தவறாக பயன்படுத்தும் பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கட்சியின் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்:-

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தலைவர் விஜயகாந்த் அவர்களின் அனுமதி பெற்றோ, தலைமை கழகத்தின் அங்கீகாரம் பெற்றோ இதுவரையிலும் எந்தவித பத்திரிக்கையும் அதாவது காலை,மாலை நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் என எதுவும் தேமுதிக சார்பில் நடத்தப்படவில்லை, அதை நடத்துவதற்கு யாருக்கும் அனுமதியோ, அங்கீகாரமோ வழங்கப்படவுமில்லை.
ஆனால் சமீப காலமாக விஜயகாந்த் அவர்களின் பெயரையும், முரசு சின்னத்தின் பெயரையும், கட்சிப் பெயரையும் மற்றும் கட்சிக்கொடியையும் இணைத்தும் அதை பயன்படுத்தியும், பல்வேறு பெயர்களில் பல பத்திரிக்கைகள் தேர்தல் காலத்தை மனதில் கொண்டு, புற்றீசல் போல் திடீரென தோன்றி, தேமுதிகவின் ஆதரவு பத்திரிக்கை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் வெளிவந்து கொண்டுள்ளன.

இதுபோன்ற பத்திரிக்கைகளுக்கும், தேமுதிகவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மேலும் அந்த பத்திரிக்கைகள் கழகத்தலைவர் விஜயகாந்த் அவர்களின் அனுமதி பெற்று, தேமுதிக தலைமைக் கழகத்தின் அங்கீகாரத்துடன் வந்துள்ளதாக கூறி, தமிழகம் முழுவதும் பலரிடமிருந்தும் பணம் பெறுவதும், விளம்பரம் செய்யவென பணம் பெறுவதும், பத்திரிக்கையின் நிருபர் என்றும் முகவர் என்றும் பல்வேறு பெயர்களில் பலரையும் நியமனம் செய்து, அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவது போன்ற மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.எனவே இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுபவர்களிடம்  தேமுதிகவின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என யாரும் ஏமாறவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுபோன்று யாரேனும் தங்களை தொடர்பு கொண்டால் உடனடியாக தலைமைக் கழகத்தை தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக இதுபோன்ற செயல்களை நிறுத்தாவிடில் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.