மூளைச்சாவு அடைந்தவரின் இருதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தானம் : 4 பேர் மறுவாழ்வு

 
 
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள காந்திநகரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மகன் செல்வராம் (வயது 45) ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், கவிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 25-ந் தேதியன்று செல்வராம் துக்கநிகழ்ச்சிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் காட்பாடி அருகே உள்ள பெருமுகை பகுதியில் சென்றுகொண்டிருந்தார்.
 
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிளில் பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த செல்வராம் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலையில் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
இதையடுத்து அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர். அதன்படி இருதயம் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 32 வயது வாலிபருக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவை வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டுவரப்பட்டது.
 
செல்வராமின் இருதயம் மதியம் 3.22 மணிக்கு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு 3.55 மணிக்கு வி.ஐ.டி. ஹெலிகாப்டர் தளத்திற்கு சென்றடைந்தது. அங்கிருந்து 3.57 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 4.32 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. இந்தியாவிலேயே தற்போது தான் மூளைச்சாவு அடைந்தவரின் இருதயம் ஹெலிகாப்டரில் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்சு மூலம் 8 நிமிடத்தில் அதாவது 4.40 மணிக்கு சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு மும்பையை சேர்ந்த 32 வயது வாலிபருக்கு இருதயம் பொருத்தப்பட்டது.
 
மாற்று இருதயம் பொருத்தப்பட்ட நபர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. செல்வராம் உடல் உறுப்புகள் தானம் மூலம் 4 பேர் மறுவாழ்வு பெறுகிறார்கள்.