ஜல்லிக்கட்டு பற்றி விவாதிக்கவில்லை: மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் பிரகாஷ் ஜாவ்டேகர்

புது தில்லி:

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு குறித்து விவாதிக்கப்பட வில்லை என்று மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் கூறியுள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டின் போது, காளைகள் துன்புறுத்தப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் மேற்பார்வையில் 2014ம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது. விலங்குகள் நல ஆர்வலர்களின் தொடர் புகார்கள், விலங்குகள் துன்புறுத்தப்பட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தடை விதித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், முன்னணி அரசியல் கட்சிகள் மதுவிலக்குடன் சேர்த்து, ஜல்லிக்கட்டு விவகாரத்தையும் கையில் எடுத்துக்கொண்டுள்ளன.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் இறுதி நாளில், பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதியிருந்த கடிதத்தில், ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக விவாதிக்கும் பொருட்டு நாடாளுமன்ற கூட்டத் தொடரை நீட்டிக்க வேண்டும் அல்லது சிறப்பு கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்ற வலியுறுத்தியிருந்தார்.

திமுக தலைவர் கருணாநிதி, ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியிருந்தார். பின்னர், ஸ்டாலின் தலைமையில் அலங்காநல்லூரில் போராட்டமும் நடைபெறும் என்று அறிவித்து பின் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றார்.

இதனிடையே, ஜல்லிக்கட்டு குறித்த நல்ல செய்தி புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் கூறியிருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில், இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டு குறித்த முடிவு எடுக்கப்படலாம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். இதனால், ஜல்லிக்கட்டுக்கு இருக்கும் தடை விலகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இருப்பினும், இந்தக் கூட்டத்தில், ஸ்மார்ட் சிட்டி, உயர்கல்வித் துறையில் கனடா அரசுடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், மியான்மரில் ரூ.371.58 கோடி மதிப்பீட்டில் 69 பாலங்கள் கட்டும் திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் மட்டுமே விவாதிக்கப்பட்டதாகவும், ஜல்லிக்கட்டு குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் கூறியுள்ளார். இது, பெரும் எதிர்பார்ப்பு கொண்டிருந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. பெரும் ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக தங்களை உடல் ரீதியாக பலப்படுத்தி தயாராகிக் கொண்டிருந்த மதுரை சுற்றுப்புற இளைஞர்கள் பெரும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.