ஆங்கில புத்தாண்டு 2016 : அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

 
தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பிறக்கப் போகும் 2016 ஆண்டிற்கு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து செய்தி
வெளியிட்டுள்ளனர்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது :-.
 
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், மலர்கின்ற புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
 
மலரும் இப்புத்தாண்டு தமிழக மக்களுக்கு உயரிய வாழ்வையும், நீங்காத வளங்களையும், நிறைவான நலன்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாகவும் அவர் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது :-.
 
தமிழக மக்களுக்குத் தொடர்ச்சியாக வேதனைகளைத் தந்த 2015ஆம் ஆண்டு மறைந்து புதுவாழ்வு தந்திடப் பொங்கி வருகிறது 2016 ஆங்கிலப் புத்தாண்டு!
 
தி.மு.க. அரசு அன்று உருவாக்கி 2015இல் பயன் தந்த மெட்ரோ இரயில் திட்டம், மின்சாரப் பிரச்சினையைத் தீர்த்த வடசென்னை, மேட்டூர், வல்லுனர் மின் திட்டங்கள் போன்ற பல்வேறு புதிய திட்டங்கள் மீண்டும் உருவாக தொழில் வளம் சிறக்க-அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு பேணி நீர்வளம் பெருக்க-விவசாயம் செழிக்க- தமிழகம் வளமும் நலமும் பெற-அனைத்திற்கும் வாயிலாக ஆட்சி மாற்றம் காண வருகிறது ஆண்டு 2016 என்பதை நினைவுபடுத்தி, தமிழக மக்களுக்கு எனது உளமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு தின நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என அவர் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது :-.
 
புத்தாண்டு எப்போதும் நம்பிக்கையுடன் தான் பிறக்கிறது என்ற போதிலும், பல நேரங்களில் அது ஏமாற்றத்தில்தான் முடிகிறது. 2015 ஆம் ஆண்டையும் நம்பிக்கையுடன் தான் வரவேற்றோம்; ஆனால், அது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் எண்ணற்ற ஏமாற்றங்களைத் தந்ததுடன், கடைசி நேரத்தில் வெள்ளத்தின் வடிவில் மிகப்பெரிய சோகத்தையும், சேதத்தையும் பரிசாக அளித்துச் சென்றிருக்கிறது. ஆனால், 2016 ஆம் ஆண்டு மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் தரும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அனைத்து காயங்களுக்கும் நிச்சயமாக 2016 ஆம் ஆண்டு மருந்து தடவும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. தமிழகத்தின் இன்றைய நிலையை மாற்றவேண்டும் என்றால் 2016 ஆம் ஆண்டில் முதலில் மாற்றமும் அடுத்து முன்னேற்றமும் ஏற்பட வேண்டும். அதற்காக இந்த ஆங்கிலப் புத்தாண்டு நாளில் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது :-.
 
புதிய வாய்ப்புகளும், சம உரிமைகளும், வாழ்க்கையில் முன்னேற்றமும் ஏற்படுமென ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறக்கும்போதெல்லாம் மக்கள் நம்பிக்கையோடு புத்தாண்டு தினத்தை கொண்டாடி வருகிறோம். எந்தாண்டும் இல்லாத வகையில், இந்தாண்டு கொட்டித் தீர்த்த கனமழையால் தமிழகத்தின் தலைநகரே சிதைந்துபோனது. பல மாவட்டங்களில் பொதுமக்களின் உடைமைகள், தொழில், விவசாயம் என அனைத்தும் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இன்று (01.01.2016) புத்தாண்டு பிறக்கிறது.
 
மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மனதில்கொண்டு புத்தாண்டை ஆடம்பரமாக கொண்டாடுகின்ற பல அமைப்புகள், விடுதிகள் போன்றவைகளெல்லாம் அதை ரத்து செய்துள்ளன. எனவே புத்தாண்டு தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடாமல், இதுவரை நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனிமேல் நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என்கின்ற தொலைநோக்குச் சிந்தனையோடு, புதியதாய் பிறக்கும் 2016 புத்தாண்டை வரவேற்று, மிகுந்த மகிழ்ச்சியோடு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி கொண்டாடி மகிழ்வோம்.
 
ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கஷ்டங்கள் நீங்கி, இருள் சூழ்ந்துள்ள அவர்களது வாழ்வில், இன்றிலிருந்தாவது ஒளி வெள்ளம் ஏற்படட்டும். தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி அகலட்டும், தமிழக மக்கள் விரும்பும் நல்லாட்சி அமையட்டும். 2016ல் தமிழகத்தில் அமையும் புதிய ஆட்சியில், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் மக்கள் அனைவருக்கும், உறுதியாக கிடைத்திட வேண்டுமென எனது இதயப்பூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தேமுதிக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.