ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில் அதிமுகவினர் பத்திரிக்கையாளர்கள் என்கின்ற பெயரில் போராட்டம் : விஜயகாந்த்

 
ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில் அதிமுகவினர் பத்திரிக்கையாளர்கள் என்கின்ற பெயரில் விஜயகாந்த் வீட்டு முன் போராட்டம் நடத்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.
 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா? அதை பாதுகாக்க வேண்டிய காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறதென தெரியவில்லை.
கடந்த சில நாட்களாக பத்திரிக்கையாளர்கள் என்கின்ற பெயரில் ஜெயா டிவியை சார்ந்தவர்களுடன் அதிமுகவினரும், சமூக விரோதிகளும், ஒன்று சேர்ந்து தேமுதிக தலைமை கழக அலுவலகத்தை முற்றுகையிட வருவதும், எனது வீட்டை முற்றுகையிட வருவதுமென தொடர்ந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தார்கள். மேலும் தரக்குறைவான மற்றும் ஆபாச வார்த்தைகளாலும் கடுஞ்சொற்களாலும் கோஷமிட்டனர்.
காவல்துறையிடம் இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தனைக்கும் எனது இல்லத்திற்கு அருகிலேயேதான் காவல் நிலையமும் இருக்கிறது.
காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் இன்று (31.12.2015) காலை தேமுதிகவின் தலைமை நிலைய செயலாளரும், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான ப.பார்த்தசாரதி மற்றும் வழக்கறிஞர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள் என பலரும் எனது வீட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டி புகார் மனு அளிக்க விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்தனர். புகார் அளிக்க வந்தவர்களில் வழக்கறிஞர்களை மட்டும் விட்டுவிட்டு, மற்ற அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
தனது வீடு மற்றும் தேமுதிக அலுவலகம் அருகில் அதிமுகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்துவதை நிறுத்திக்கொள்ளாவிட்டால், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டின்முன், அறப்போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர தனக்கு வழியேதும் தெரியவில்லை என விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனது வீடு மற்றும் கட்சி அலுவலகம் அருகாமையில் போராட்டம் நடத்த காவல்துறை எப்படி அனுமதித்தது? இது முழுக்க முழுக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தூண்டுதலின் பெயரிலேயே நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது. சென்னையில் அனைத்து அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்துவதற்கு வள்ளுவர்கோட்டம், கலெக்டர் அலுவலகம், சேப்பாக்கம் ஆகிய மூன்று இடங்களின் அருகில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் எனக்கு எதிரான போராட்டங்கள் மட்டும் எனது வீடு மற்றும் கட்சி அலுவலகம் அருகில் நடத்துவதற்கு காவல்துறை எந்த சட்டத்தின் அடிப்படையில் அனுமதி கொடுத்தது.
அதிமுகவினர் நடத்திய போராட்டத்தை நிறுத்துவதாக சொல்லி அறிக்கை வெளியிட்டு நாடகமாடிய முதலமைச்சர் ஜெயலலிதா, பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் பிரச்சனையை பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார். இதுதான் அவர் சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடா? எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என்கின்ற கடமை உணர்வும், கண்ணியமும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இல்லையா? இப்பிரச்சனையில் காவல்துறை தனது கடமையிலிருந்து தவறியதாகவே தெரிகிறது. காவல்துறை போராட்டம் செய்பவர்களுக்கு ஆதரவாக இருந்து கொண்டு, தேமுதிகவினரை வன்முறை செய்வபவர்களாக தமிழக மக்களிடம் சித்தரிப்பதற்காகவே, கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நான் கருதுகிறேன்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் வீட்டின் அருகிலே இதுபோன்று போராட்டத்தை நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளிக்குமா? மழை வெள்ள பாதிப்பால் இந்த ஸ்டிக்கர் அதிமுக அரசின் மீது, மக்கள் மிகுந்த அதிருப்தியிலும், கோபத்திலும் இருப்பதை மறைப்பதற்காகவே, முதலமைச்சர் ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில் இதுபோன்ற போராட்டங்கள் எனக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படுவதாக தெரியவருகிறது. இந்த நிலை தொடருமானால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டின்முன், நான் அறப்போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர எனக்கு வழியேதும் தெரியவில்லை. எனவே இதை உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
 
Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.