முதலமைச்சர் ஜெயலலிதா நீதி விசாரணைக்கு தயாரா? : மு.க.ஸ்டாலின்

 
முதலமைச்சர் ஜெயலலிதா செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் ஜெயலலிதா செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறந்து விடப்பட்டது தொடர்பாக விளக்கங்களைத் தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து நீதிவிசாரணை நடத்தத் தயாரா என்று தெரிவிக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்காவிட்டால், திமுக தலைவர் கருணாநிதியின் அனுமதியுடன் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.
. “கண்ணுக்கு எட்டியவரை எதிரிகளே தெரியவில்லை’ எனப் பேசிவந்த ஜெயலலிதா, இப்போது சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதற்கான வியூகம் வகுக்கப்படும் என சொல்லியிருக்கிறார். அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டமும் பொய்கள் நிறைந்ததாக நடந்து முடிந்துள்ளது. இது அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.
நமக்கு நாமே பயணம் மீதமுள்ள 22 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஜனவரி முதல் வாரத்திலிருந்து தொடங்கி பிப்ரவரி மாத இறுதிவரை நடைபெறவுள்ளது. நமக்கு நாமே பயணத்திட்டம் பொதுமக்களை மட்டுமின்றி ஜெயலலிதாவையும் கவர்ந்துள்ளது வரவேற்கத்தக்கது என்று மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.