
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
2022ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் ஒரு ஐபிஎல் ஆட்டத்தில் ரவிச்சந்திரன் அஷ்வின் 19ஆவது ஓவரில் தான் ரிடயர்ட் அவுட் முறையில் அவுட் ஆவதாகச் சொல்லிவிட்டு மைதானத்தைவிட்டு வெளியில் சென்றுவிட்டார். அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
மீதமுள்ள 10 பந்துகளில் தனது அணியின் மெகா ஹிட்டர் ஒருவர் வந்து சிக்ஸ், ஃபோர்களாக அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என்ற எண்ணத்தில் அஷ்வின் அதைச் செய்தார். ஆனால் அன்றைய தினம் அவரது அணி அவர் எதிர்பார்த்தைப் போல அதிரடியாக ரன் சேர்க்கவில்லை.
இந்த ரிடயர்ட் அவுட் முறை என்றால் என்ன? கிரிக்கெட்டில், “காயத்தால் ஓய்வு பெறுவது (retired hurt) உண்டு. ஒரு பேட்ஸ்மேன் காயம் அல்லது நோய் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறி, பின்னர் அவர் உடல்நிலை சரியானபின்பு, அவர்களின் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கவில்லை என்றால் மீண்டும் பேட்டிங் செய்ய முடியும்.
அதே சமயம், “ஓய்வு பெற்றவர்” (retired out) என்பது பேட்டிங் அணி ஒரு பேட்டரை மைதானத்திலிருந்து நீக்குவதற்கான ஒரு மூலோபாய முடிவாகும், மீண்டும் அந்த பேட்டர் பேட்டிங் செய்ய முடியாது.
இந்த ரிடயர்ட் அவுட் முறையின் உச்ச கட்டமாக ஒரு அணி விக்கட் இழப்பின்றி 192 ரன் எடுத்திருந்த நிலையில் அதே 192 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இது எப்படி சாத்தியம் என்று யோசிக்கிறீர்களா?

மகளிர் உலகக் கோப்பை 2025 தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஆசிய அணிகளுக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
இதில் ஒரு தகுதிச் சுற்று போட்டியில் ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணி மற்றும் கத்தார் மகளிர் அணியும் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணியில், இஷா ரோஹித் ஓசா 113 ரன்களை குவித்து அசத்தினார்.
மற்றொரு தொடக்க வீராங்கனை தீர்த்தா சதீஸும் தொடர்ந்து அதிரடி காட்டி 74 ரன்களை குவிதார். இந்த அணி விக்கெட்களை இழக்காமல் தொடர்ந்து அதிரடி காட்டி வந்தது. 192/0 ரன்களை எடுத்து விளையாடி வந்தபோது, மழை குறுக்கிடும் நிலை ஏற்பட்டது.
10 பேட்டர்களும் அவுட்
இதனால், பயந்துபோன ஐக்கிய அரபு அமீரக அணி, 192/0 ரன்கள் எடுத்திருந்தபோது, மீதமிருந்த அனைத்து பேட்டர்களும் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் அவுட் ஆனார்கள். கத்தார் மகளிர் அணி, மிகவும் பலவீனமான அணி என்பதால், தைரியமாக இந்த முடிவை எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, உடனே பீல்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி தொடர்ந்து அபாரமாக பந்துவீசியதால், கத்தார் மகளிர் அணி, வெறும் 29 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி படுதோல்வியை சந்தித்தது. இந்த 29 ரன்களில், ஓபனர் ரிப்ஜா இமானுவேல் மட்டும் 20 ரன்களை எடுத்திருந்தார்.
இவ்வாறு ரிடயர்ட் அவுட் முறையின் உச்ச கட்ட பயன்பாடு இந்த ஆட்டத்தில் வெளிப்பட்டது.





