
‘இந்தியா – பாக்., இடையிலான மோதலை நான் தான் நிறுத்தினேன் என சொல்ல விரும்பவில்லை” என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
டிரம்பின் திடீர் வார்த்தைகள், நமக்கு ஒரு மலையாள நாவலாசிரியரின் கதாபாத்திரத்தை நினைவூட்டுகிறது. மலையாளத்தில் வைக்கம் முகம்மது பஷீர் மிகச் சிறந்த சிறுகதை மற்றும் நாவல் ஆசிரியராக அறியப்படுபவர். பஷீரின் ‘ஆனவாரியும் பொன்குரிசும்’ என்ற நாவலில் வரும் எட்டுக்காலி மம்முஞ்ஞு என்ற கதாபாத்திரத்தின் நினைவு திடீரென வந்தது.
எட்டுக்காலி என்பதன் பெயர்ப் பொருத்தம் என்னவோ அந்தக் கதாபாத்திரத்துக்கு எட்டுக்கால் பூச்சியைப் போன்ற உடல்வாகு காரணமாக இருக்கலாம். அவர் ஒரு உதார் பேர்வழி. எங்காவது ஒரு பெண் கர்ப்பமாக இருந்தால், அதற்குக் காரணம் நான் தான் என்று உதார் விட்டுக் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம். காதில் கேட்கும் செய்தியை வேறாக ஊதிப் பெரிதாக்கி கதை விடும் சுபாவம். ஒரு முறை பாருக்குட்டி கர்ப்பமானதாக சுற்றுவட்டார சகாக்கள் சொல்ல, அந்த கர்ப்பத்துக்கும் நானே காரணம் என்று வீண் டம்பம் அடிக்க, கடைசியில் அது ஒரு யானை என்று தெரியவரும்.
இப்போது டிரம்ப் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். எல்லாவற்றுக்கும் காரணம் நானே என்ற அவரது வீண் டம்பம் இப்போது அவரை உச்சபட்ச ஹீரோ நிலையில் இருந்து ஒரு படத்தின் காமெடியன் ரேஞ்சுக்கு இறக்கிக் கொண்டிருக்கிறது. சிலருக்கு சறுக்கல் இப்படித்தான் தொடங்கும் போலும்!
என்னால்தான் இது நடந்தது என்று சொல்ல விரும்பவில்லை. ஆனால், நிச்சயமாக கடந்த வாரம் பாகிஸ்தான், இந்தியா இடையேயான பிரச்சனையை தீர்க்க உதவினேன். அது மேலும் மேலும் விரோதமாக மாறிக்கொண்டிருந்தது. திடீரென்று வெவ்வேறு ஏவுகணைகள் வானில் செலுத்தப்படும் காட்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நாங்கள் அதைத் தீர்த்து வைத்தோம். – என்று டிரம்ப் கூறியது, இந்தியாவில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
காரணம், ஒரு ராணுவத் தாக்குதலின் முக்கியமான கட்டத்தில், இந்தியாவின் கை ஓங்கியிருந்த சூழலில், பாகிஸ்தானின் பெரும்பாலான விமானத் தளங்கள் இந்தியாவில் சின்னாபின்னமான நிலையில், இந்தியாவால் பாகிஸ்தானைப் பணிய வைத்து அதன் முன் உள்ள நீண்டகால சவால்களை சரி செய்திருக்க முடியும் என்ற சூழலில், தானாக வந்து, இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான போரை நான் தான் நிறுத்தினேன் என்ற போது, தன் நண்பருக்காக மோடி அடிபணிந்துவிட்டார் என்று இந்தியாவில் ஒரு தரப்பு புகைந்து கொண்டிருந்தது.
இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தி விட்டேன். அதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பதைத் தடுத்து காப்பாற்றி விட்டேன் என்று சமூக வலைத்தளத்தில் முதல் நபராகத் தெரிவித்தார். இதனை அடிக்கடி பேசியும் வருகிறார். மேலும் வணிக ரீதியாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நாங்கள் உதவ இருக்கிறோம். வணிகத்தை காட்டி போரை நிறுத்தியவன் நான் ஒருவன் தான் என்று மார்தட்டிக் கொண்டிருந்தார். ஆனால் இந்தியாவோ, பாகிஸ்தான் கெஞ்சியதால் மட்டுமே தாக்குதலை நிறுத்தினோம். இதில் கடந்த சில நாட்களாக தரப்புடன் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எந்த நேரத்திலும் அமெரிக்காவுடன் வணிகம் தொடர்பில் பேசவே இல்லை என்று தெளிவாக உறுதியாக குறிப்பிட்டது. மேலும் தானாக முன்வந்து காஷ்மீர் விவகாரத்தில் நான் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று டிரம்ப் கூறியதையும் இந்தியா முற்றிலுமாக மறுத்து காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி நாங்கள் பேசுவதாக இருந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி பாகிஸ்தான் உடன் மட்டுமே பேசுவோம் என்று தெளிவாக தெரிவித்தது. இதுவே ட்ரம் முகத்தில் கரியை பூசியது போல் ஆனது.
இந்நிலையில் கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மத்தியில் டிரம்ப் பேசியபோது, “நான் தான் போர் நிறுத்தம் செய்தேன் ஏன கூறவிரும்பவில்லை. ஆனால், கடந்த வாரம் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்த உதவி செய்தேன். இந்த பிரச்னை மேலும் மேலும் தீவிரமானது. பல்வேறு வகையான ஏவுகணைகளும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன. இதனால், நாங்கள் தீர்வு கண்டோம். நான் இங்கும், அங்கும் செல்ல விரும்பவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிரச்னை தீரவில்லை என அறிந்தோம். ஆனாலும் அதனை தீர்த்து வைத்தோம். நாங்கள் வர்த்தகம் குறித்து பேசினோம். போருக்கு பதில் வர்த்தகம் செய்வோம் என்றேன். இதனால், பாகிஸ்தான் மகிழ்ச்சி அடைந்தது. இந்தியாவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. அவர்கள் அந்த வழியில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
“ஆயிரம் ஆண்டு பிரச்னைக்காக போரிடுகின்றனர். அந்த பிரச்னையை தீர்த்து வைக்க என்னால் முடியும் என நான் சொன்னேன். என்னால் சரிசெய்ய முடியும். நாம் அனைவரும் அமர்ந்து பேசுவோம். ஆயிரம் ஆண்டு பிரச்னைக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் போரிடுவீர்கள். நீண்ட காலமாக போர் நடக்கிறது. இது கடினமான ஒன்று. நீண்ட காலமாக போர் நடக்கிறது. அது உண்மையில் ஒரு நாள் கட்டுப்பாட்டை இழந்து செல்லப்போகிறது” என்று பேசினார்.
ஆனால் மேற்குலகை பொருத்தவரை காஷ்மீர் என்பது ஆயிரம் ஆண்டு பிரச்சினையாக பார்க்கப்படுகிறது எனினும் பாகிஸ்தான் உருவானதே 75 ஆண்டுகளுக்கு முன் தான் என்பதால், காஷ்மீர் விவகாரமும் நூற்றாண்டுகளுக்குள் உட்பட்ட விவகாரம் தான் என்பதால், இந்தியா அதைப்பற்றி மத்தியஸ்தம் பேசுவதற்கு வேறு நாடுகளின் உதவியை நாட விரும்பவில்லை.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் விவகாரம் வேறு சேர்ந்து கொண்டிருக்கிறது. அதில் அப்பட்டமாக இந்திய எதிர்ப்பு என்ற நிலையை காண்பித்தது இந்தியாவில் ட்ரம்புக்கு எதிரான புகைச்சலை மேலும் கிளப்பி இருக்கிறது.
இந்நிலையில், டிரம்ப் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிந்து நதி நீர் ஒப்பந்தமாகட்டும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராகட்டும் இவை எல்லாம் பேசுவதாக இருந்தால், ” இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, அதை செய்த பிறகு பேசுவோம்” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளது கவனம் பெற்றது.
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சர்வதேச நாடுகளின் ஆதரவை நாம் பெற்றுள்ளோம். பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா., தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. கடந்த 7 ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டனர்.
“பாகிஸ்தானுடனான நமது உறவு மற்றும் பிரச்னை என்பது நிச்சயம் இரு தரப்பானது. பல ஆண்டுகளாக இதே நிலைப்பாடு தொடர்கிறது. இதில் மாற்றம் ஏதுமில்லை. பாகிஸ்தானுடன் பயங்கரவாதம் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பிரதமர் மோடி தெளிவாகக் கூறியுள்ளார். இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகளின் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது. பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அவர்கள் மூட வேண்டும். என்னசெய்ய வேண்டும் என அவர்களுக்கு நன்றாகத் தெரியும். பயங்கரவாதம் குறித்து என்ன செய்ய வேண்டும் என அவர்களுடன் பேசத் தயாராக இருக்கிறோம்.
“சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவே இருக்கும். காஷ்மீர் குறித்து விவாதிக்க வேண்டிய விஷயம் இருக்குமேயானால், அது பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் இருந்து அந்நாடு வெளியேறுவதே ஆகும். இது குறித்து விவாதிக்கத் தயாராக இருக்கிறோம்.
“இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தை சிக்கலானது. எந்த வர்த்தக ஒப்பந்தமும் பரஸ்பரம் நலன் பயக்கும் வகையில் இரு நாடுகளும் செயல்பட வேண்டும். வர்த்தக ஒப்பந்தத்தில் இதுவே எதிர்பார்க்கப்படும். அது செய்யப்படும் வரை, அது குறித்த எந்த கணிப்பும் சரியாக இருக்காது.
“பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்ற நமது நோக்கத்தை நிறைவேற்றி விட்டோம். இந்தத் தாக்குதல் தொடங்கிய போது, பயங்கரவாத உள்கட்டமைப்பு மீது மட்டுமே குறிவைத்தோம். ராணுவம் மீது அல்ல என்ற செய்தியை அனுப்பினோம். இதில் தலையிடாமல் விலகியிருக்கும் வாய்ப்பு பாகிஸ்தான் ராணுவத்திற்கு இருந்தது. ஆனால், அவர்கள் நல்ல அறிவுரையை ஏற்கவில்லை. 10ம் தேதி காலை அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட பெரிய பாதிப்பு குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச்சூடு நடத்துவது யார் என்பது தெளிவாக தெரிகிறதே” என்று விளக்கம் அளித்தார்.
ஆனாலும் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக, டிரம்ப் தன் மனம் போன போக்கில் பேச்சிக் கொண்டுதான் இருக்கிறார். அதன் மூலம் இதுவரை நெருங்கிய நட்பு வளையத்தில் இருந்த இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்ல வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் உண்மை. ஏற்கெனவே சீனாவை எதிர்த்து களம் ஆடிக் கொண்டிருக்கும் டிரம்புக்கு இருந்த ஒரே வாய்ப்பு இந்தியாவாகத்தான் இருந்தது. இப்போது பாகிஸ்தானை மீண்டும் மடியில் கட்டிக் கொண்டு, இந்திய எதிர்ப்பு என்ற நிலையை நோக்கி மெல்ல மெல்ல நகர்கிறது டிரம்பின் அமெரிக்க நிர்வாகம் என்கிறார்கள் இந்த விவகாரத்தை உற்று நோக்கும் வல்லுநர்கள். எனினும், மீண்டும் யுடர்ன் அடிக்கும் நிலைக்கு ட்ரம்ப் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கிலை. காரணம் அவரிடம் இப்போது நிலையான தன்மை இருப்பதிலை என்பது வெளிச்சமாகியிருகிறதே!





