
தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் உறவினர் வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமைச்சர் அன்பில் மகேஷ் உறவினரான ஆகாஷ் பாஸ்கரன் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. டான் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை ஆகாஷ் பாஸ்கரன் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இது உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமானதாகும்.
முன்னதாக, இன்று காலை முதல் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். டாஸ்மாக் மூலம் எப்படி ஆயிரக்கணக்கான கோடிக் கணக்கில் பணத்தை எளிதாகக் கொள்ளையடிக்கலாம் என்னும் முன்னாள் டாஸ்மாக் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆலோசனைகளை அரசுத் தரப்பில் சரியாக மேற்கொண்டது இவர் தான் என்ற குற்றச்சாட்டுகள் கடந்த காலங்களில் கூறப்பட்டிருக்கிறது என்பதால், இந்த சோதனைகள் பழைய வழக்குகளை மையமாக வைத்தே பொருத்திப் பார்க்கப் படுகின்றன.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2024 வரையிலான நான்கு வருட அதிமுக ஆட்சி மற்றும் நான்கு வருட திமுக ஆட்சியில் ஒட்டுமொத்தமாக தமிழக காவல்துறையினர் சுமார் 41 வழக்குகளை பதிவு செய்திருந்தனர். இந்த 41 வழக்குகளின் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை இதன் உள்ளே வந்திருக்கிறதே தவிர, டாஸ்மாக் தொடர்பில் அமலாக்கத்துறை ஒன்றும் பொய் வழக்கு போடவில்லை என்கிறார்கள் இந்த விவகாரத்தை உற்று நோக்குபவர்கள்.
இந்த 41 வழக்குகளும், அதிமுக மற்றும் திமுக ஆட்சி காலத்தில் பதியப்பட்டது தான்! எம்ஆர்பியை விட அதிக விலைக்கு விற்பனை செய்தது, அட்டைப்பெட்டி டெண்டர் முறைகேடு, போக்குவரத்து டெண்டர் முறைகேடு, கடை வாடகை டெண்டர் முறைகேடு, ஊழியர்கள் டிரான்ஸ்பர் செய்வதில் முறைகேடு மற்றும் லஞ்சம், அதிகாரிகள் கமிஷன் வாங்கியது இதுபோன்ற வழக்குகள் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு ஆட்சி காலத்திலும் பதியப்பட்டு இருக்கிறது.
ஆனால் மது தயாரிப்பு ஆலைகளிடமிருந்து டாஸ்மாக் கருவூலக் கணக்குக்குக் காட்டாமல் நேரடியாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு பாட்டில்கள் அனுப்பி விற்பனை செய்யப்பட்டது, திமுக ஆட்சிக் காலத்தில் தான் நடந்திருக்கிறது என்கிறார்கள். மாநில லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்தபோது சில கடைகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கணக்கில் வராத பாட்டில்கள் இருந்ததால், அது இந்த வழக்கில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
இந்த அனைத்து ஊழல்களின் ஒட்டுமொத்த மதிப்பீடு ஆயிரம் கோடி என்ற அளவில் இருக்கும் என்றாலும், டாஸ்மாக் கருவூலக் கணக்கில் காட்டாமல் நேரடியாக டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பில்லில் காட்டாமல் விற்பதன் மூலம் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடிக்கும் மேல் பணம் புரண்டிருக்கிறது என்றும், கடந்த நான்கு ஆண்டுகளில் எப்படியும் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் பணம் கரைபுரண்டிருக்கும் என்றும் கணக்குகள் சொல்லப்படுகின்றன.
சில மது தயாரிப்பு ஆலைகளை ஒப்புக்கு தயார் செய்து அவர்களிடமிருந்து நேரடியாக பாட்டில்களை வாங்கி டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பும் வேலையை கனக்கச்சிதமாகச் செய்து வந்தார் டாஸ்மார்க் நிர்வாக இயக்குனர் விசாகன் என்ற குற்றச் சாட்டு சமூக மற்றும் அரசியல் மட்டத்திலும் கூறப்பட்டு வந்தது.
இவர் குறித்து அடிக்கடி தனது யுடியூப் சேனல்கள் மற்றும் பொதுத் தளத்தில் பரபரப்பு குற்றச்சாட்டுகளைக் கூறி வந்த சமூக ஆர்வலர் சவுக்கு சங்கர், இவருடைய லேப்டாப்பை சோதனை செய்தபோது மூன்று இ-மெயில் கணக்குகளை வைத்து தகவல்களை பரிமாறிக் கொண்டு வந்திருப்பதாகவும், ஒரு இமெயிலில், மது தயாரிப்பு ஆலைகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், இன்னொரு இமெயில் ஐடியுடன் முதல்வரின் மருமகனுடன் தொடர்பு வைத்திருக்க பயன்படுத்தியதாகவும், இன்னொரு இமெயில் ஐடி மூலம் டாஸ்மாக் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியுடன் தகவல் தொடர்பு வைத்திருந்தார் என்றும் கடந்த காலங்களில் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.
எனவே இந்த சோதனை மத்தியப் பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் நடத்தப் படுகிறது என்பதும், இதன் பின்னர் பெரும் அரசியல் பூகம்பம் தமிழகத்தில் ஏற்படும் என்றும் சமூகத் தளங்களில் பலரும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.





