
- துக்ளக் சத்யா
அரசியல் அமைப்பு பற்றிய விளக்கங்களை சுப்ரீம் கோர்ட்டிடம் கேட்கும் அதிகாரத்தை அரசியல் சட்டம் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. அதன்படியே அவர் 14 கேள்விகளைக் கேட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பரிசீலனையில் இருந்த மசோதாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டே ஒப்புதல் அளித்ததாலும், அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்படாத காலக்கெடுவை அவருக்கும் கவர்னருக்கும் சுப்ரீம் கோர்ட் நிர்ணயித்ததாலும், இக்கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியைப் பொறுத்த வரை இது உரிமைப்பிரச்னை.
இதற்கு சுப்ரீம் கோர்ட் பதிலளிப்பதற்கு முன்பாகவே தமிழக முதல்வர் பதில் அளித்துள்ளார்.
‘ சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து முடிந்து போன விவகாரத்தில், ஜனாதிபதியின் மூலமாக மத்திய அரசு விளக்கம் கேட்கிறது. இது அரசியல் அமைப்பையே நிலைகுலைய வைக்கும் செயல். இதிலிருந்தே, கவர்னரை மாநில அரசுக்கு எதிராக பாஜக தூண்டுவது தெரிகிறது. மத்திய பாஜக அரசின் தீய எண்ணம் வெளிவந்துள்ளது… ‘என்ற வகையில் அவர் கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வெளியானபோதே, ‘ இது சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் தன் அதிகார வரம்பை மீறியுள்ளதோ என்ற சந்தேகம் உருவாகும் வகையில் உள்ளது. மத்திய அரசு திருத்த மனு போட்டால்தான் தெளிவாகும் என்று எழுதியிருந்தேன்.
மத்திய அரசு திருத்த மனு போடவில்லை. ஜனாதிபதியே விளக்கம் கேட்டுள்ளார்.
எந்த மசோதாவும் ஜனாதிபதி அல்லது கவர்னர் ஒப்புதல் அளித்த பிறகே சட்ட அந்தஸ்தைப் பெறும். சுப்ரீம் கோர்ட்டே அதைச் செய்தது புதிய முறையாக உள்ளது. எனவேதான் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி எப்படி மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்படுகிறாரோ, அப்படி கவர்னர்கள் மாநில அரசின் பிரதிநிதியாக செயல்பட வேண்டும் என்று மாநில அரசுகள் எதிர்பார்க்கின்றன. ஆனால், உண்மையில் கவர்னரும் மத்திய அரசின் பிரதிநிதிதான்.
மாநில அரசு தவறான திசையில் செல்வதாகத் தோன்றினால் அதைத் தடுப்பது அவரது கடமையாகிறது.
மத்திய அரசுக்கு முரண்பாடான மசோதாக்களை மாநில அரசு அனுப்பினால் அவற்றை கவர்னர் எப்படி ஏற்க முடியும்? மாநில அரசிடம் கேட்டுப் பார்ப்பார். முடியாவிட்டால் ஜனாதிபதிக்கு அனுப்பி விடுவார். அவ்வளவுதான் ஒரு கவர்னர் செய்ய முடியும்.
இது புரியாமல், ‘ கவர்னர் ஒரு போஸ்ட்மேன். கையெழுத்து போடுவதுதான் அவருடைய வேலை ‘ என்று மாநில அரசு கூறும்போது சிக்கல் ஏற்படுகிறது.
ஜனாதிபதி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க அரசியல் சட்டப்படி சுப்ரீம் கோர்ட் கடமைப்பட்டுள்ளது. அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது என்பது சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரியாமல் இருக்க முடியாது.
சுப்ரீம் கோர்ட் பதில் தர வேண்டியதில்லை என்ற வாதம், அது பதில் தரக்கூடாதே என்று கவலைப்படுபவர்களின் எண்ணம்.
ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முழுமையாக விசாரித்து பதில் அளித்தால், முந்தைய தீர்ப்பு மாற்றப்படும் வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.





