தொடர்ந்து என்னைப் புறக்கணித்து வருகிறார் மோடி: அன்னா ஹசாரே கடிதம்

புது தில்லி:

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரமதர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், மோடி தன்னைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார், மேலும் அவர் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கடந்த கால காங்கிரஸ் ஆட்சிக்கும் தற்போதைய பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு ஹசாரே எழுதியுள்ள 3 பக்க கடிதம், மும்பையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

பிரமதர் மோடிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அன்னா ஹசாரே எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளான கருப்புப் பணத்தை திரும்ப கொண்டு வருதல், ஊழலற்ற இந்தியாவை உருவாக்குதல் உள்ளிட்டவைகளை மோடி மறந்துவிட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

”லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்புகள் சீராக செயல்படும்” என்ற தேர்தல் வாக்குறுதியை நினைவுப்படுத்தியுள்ள அன்னா ஹசாரே, கடந்த மக்களவைத் தேர்தலின்போது, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்போம், ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம் என்பன போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அளித்தீர்கள். அவற்றை, நீங்கள் மறந்திருக்கலாம். நிறைவேற்றப்படாத அந்த வாக்குறுதிகளை மீண்டும் நினைவூட்டும் வகையில் இக்கடிதத்தை எழுதியுள்ளேன். நான் ஏற்கெனவே எழுதிய பல கடிதங்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டன. அவை, குப்பைத் தொட்டியில் தான் வீசப்பட்டிருக்கும் என்பதை அறிவேன். எனது தற்போதைய கடிதத்துக்கும் அதே கதி ஏற்படலாம். ”பிரதமருக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு கடிதத்துக்கும் பிரதமர் பதிலளிக்க முடியாது. எனினும், நாட்டுக்காக தங்களையே அர்பணித்துள்ள சமூக ஆர்வலர்கள் அளிக்கும் கடிதங்களுக்கு பிரதமர் பதில் அனுப்பலாம்.” என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஹசாரே.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிக அளவில் இருந்தது. லஞ்சம் வழங்கப்பட்டால் மட்டுமே வேலை நடைபெற்றது. மோடியின் வாக்குறுதியை நம்பி வாக்களித்த மக்கள் தற்போதும் அதே நிலையை தான் எதிர்கொள்கின்றனர். பணம் இல்லாமல் ஒரு வேலையும் நடைபெறுவதில்லை. பணவீக்கமும் குறையவில்லை. கடந்த காலங்களில் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது தொலைபேசியில் என்னோடு பேசுவார். வாஜ்பாய் புணே வரும்போது, என்னைக் குறித்து விசாரிப்பார். மன்மோகன் சிங் கூட எனது கடிதங்களுக்குப் பதில் அனுப்பியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் சேஷாத்ரி எனது கிராமத்துக்கு வந்து, என்னைக் குறித்து புத்தகம் எழுதியுள்ளனர். ஆனால், பிரமதர் மோடி தன்னை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார் ஹசாரே.