தமிழக மீனவர் வாழ்வாதார பிரச்சினைக்குத் தீர்வு என்ன? : முக்கிய பிரமுகர்கள் கருத்து

மதுரையில் மீனவர் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் “தமிழக மீனவர் வாழ்வாதார பிரச்சினைக்குத் தீர்வு என்ன?” என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு நேற்று (02-01-2016) நடைபெற்றது.
மீனவர் உரிமைக் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் சி.சே. இராசன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை எழுதிய “மீனவர் கடல்சார் பழங்குடியினரா?” என்ற தலைப்பிலான சிறு நூலை கடிகை ஆன்டனி நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். நடைபெற்ற கருத்தரங்கில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அவர்களது கருத்துகளை கூறினர்.
தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு பேசியதாவது :-
” கச்சத்தீவை 1974-இல் இந்தியா இலங்கைக்குக் கொடுத்தது என்றால் அது (கச்சத்தீவு) இந்தியாவிற்கு உரியது என்றுதானே அர்த்தம். தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை தமிழக அரசிடம் கூட கேட்காமல் வழங்கப்பட்டது.
தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை நீங்கள் எப்படி கொடுக்கலாம் என எந்த தமிழக முதலமைச்சரும் இந்திய அரசைக் கேட்கவில்லை. அப்போதே இது “அறநெறிக்குப் புறம்பான ஒப்பந்தம்” என அரசியல் தலைவர்களால் விமர்சிக்கப்பட்டது. இந்தியாவுடன் ஒரு நாட்டை இணைத்துக் கொள்ளவேண்டுமானால், சட்டத்திருத்தம் மூலம் இணைத்துக்கொள்ளலாம்.
ஆனால் இந்தியாவின் ஒருபகுதியை பிறருக்குக் கொடுக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. கோடிக் கணக்கான மக்களின் விருப்பத்துக்கு எதிராகச் செய்யப்பட்டது எப்படி சரியாக இருக்கமுடியும்? கோட்பாடு அடிப்படையில் கச்சத்தீவைத் திரும்பப்பெறமுடியும்.
பண்டைகாலத்தில் செய்து வந்தத் தொழிலை, அதே இடத்தில் இருந்து செய்து வருகிறவர் பழங்குடியினர் என அடையாளம் கூறலாம். அந்த அடிப்படையில் மீனவர்கள் கடல்சார் பழங்குடியினர். மீனவர்களைப் பாதுகாக்க இந்திய கடற்படை தயாராக இல்லை. அதாவது அக்கறை இல்லை. ஓட்டுப்போடும் போது மட்டும் இந்தியர்கள். சிங்களக் கடற்படையால் சுடும்போது தமிவக மீனவர்கள் என அடையாளம் காட்டப்படுகிறார்கள்.
மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழக அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீனவர்களுக்காக என்ன செய்தார்கள்? கையேந்தி நின்று ஒரு இனம் பிழைக்கமுடியுமா? கட்சிகளைக் கடந்து மீனவர்கள் ஒற்றுமை பேணவேண்டும்.
ஒடுக்கப்பட்ட மக்கள் இன உணர்வோடு இணையவேண்டும். தமிழக மீனவர்கள் சிக்கல் என்பது தமிழர்களுக்கான இனச்சிக்கல். அரசியல்வாதிகள், ஓட்டு கேட்க வரும்போது “எங்களை காக்க வராதவர்களுக்கு ஓட்டு போடமாட்டோம்” எனக் கூறுங்கள். அரசியல் அறிவைப் பெருக்கிக் கொள்ளவேண்டும். இளைஞர்களுக்கும் அதனைப் புகட்ட வேண்டும் என்றார்.
நிரபராதி மீனவர் சங்கத்தின் அமைப்பாளர் பாம்பன் அருளானந்தம் பேசியதாவது :-
“1983-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி மீனவர் மீதான தாக்குதல் பிரச்சினையை இலங்கை கடற்படை துவங்கியது. இன்னும் அது தொடர்ந்து வருகிறது.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிகள் மாறி வந்தாலும் இந்தச் சிக்கலுக்கு தீர்வுக்காணப்படவில்லை. இன்னும் 91 தமிழக மீனவர்களும் 71 படகுகளும் இலங்கையால் பிடித்து வைக்கப்பட்டுள்ளன.. ஆனால் தமிழகத்தில் 12 இலங்கை மீனவர் படகுகள் மட்டுமே பிடித்து வைக்கப்பட்டிருக்கிறது.
மீனவர்கள் பழங்குடியினர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அரசியல் செல்வாக்கு இல்லாததால் அவர்கள் இவ்வளவு பாதிப்புக்குள்ளாகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தமிழக மீனவர்கள் கடலில் காணாமல் போனால் அவரைத் தேடுவதில் அரசுகள் அதிக அக்கறை காட்டுவதில்லை.
கடல் குறித்து அறிந்திடாத அதிகாரிகள் தான் பொறுப்பில் இருக்கிறார்கள். அடிவாங்குவதும் சுடுவதும் தொடர்ந்தாலும் கடலுக்குச் செல்கிறோம். மீனவர் பிரச்சினை உரிமை பிரச்சினை இதனைத் தீர்க்கவேண்டியது அரசு என்றார் அருளானந்தம்.
எழுத்தாளர் குறும்பனை பெர்லின் பேசியதாவது :-
“கடல் குறித்துத் தெரியாதவர்கள் மீனவர்களுக்கான சட்டத்தையும் உத்தரவையும் பிறப்பிக்கிறார்கள். இதனை எப்படி அனுமதிக்கமுடியும்?
கடலோர மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மீனவ மக்களுக்கு விரோதமான திட்டங்களைக் கொண்டு வராதீர்கள் என்றால் கடலோர மக்களை தேச விரோதிகளாக அரசு கருதுகிறது. மீனவர்களின் பழைய உரிமைகளைச் சொல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்” என்றார்.
குமரி மாவட்ட அருட்திரு சர்ச்சில் பேசியதாவது :-
” மக்கள் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அப்போதுதான் மீனவர்கள் கடல்சார் பழங்குடியினர் என்ற கோரிக்கையை நாம் நம்மிடம் ஓட்டுகேட்க வரும் அரசியல்வாதிகளிடம் வற்புறுத்த முடியும். கடலோடு போராடும் நாம் இப்போது அரசாங்கத்திடம் போராடவேண்டியதிருக்கிறது என்றார்.
தூத்துக்குடி அருட்திரு எஸ்.டி. செல்வராஜ் பேசியதாவது :-
“இதுவரை மத்தியில் ஆட்சிகள் மாறி மாறி வந்திருக்கின்றன. நாமும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த மத்திய ஆட்சியில் பண்புநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மீனவர்கள் உரிமையை மட்டுமல்ல, அனைவரது உரிமைகளும் காக்கப்படவேண்டும். அதற்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
மீனவர் உரிமைக் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் சி.சே. இராசன் பேசியதாவது :-
மீனவர் உரிமைக் கூட்டமைப்பானது, மீனவர் சங்கங்கள் மற்றும் இயக்கங்களை இணைப்பதிலும், ஒற்றுமைப்படுத்துவதிலும், மீனவர் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் சாதி, மதங்களைக் கடந்து மீனவர்களை, உரிமைக் கண்ணோட்டத்தில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
சுருக்கமாகச் சொல்வதெனில் மீனவ இன மக்கள் இணைந்து, ஒற்றுமையுடனும் அமைதியுடனும் மகிழ்வுடனும் வாழ்வதற்கானப் பணிகளை மீனவர் உரிமைக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருகிறது.
இதற்காக மாநில அளவில் ஐந்து மாநில மாநாடுகளை பகுதி சார்ந்த மீனவர் சங்கங்கள், இயக்கங்கள், மீனவர் பிரதிநிதிகளுடன் இணைந்து கூட்டு முயற்சியாக நடத்தியுள்ளோம். மீனவர்களுக்குத் தனித்தொகுதி வழங்கப்படவேண்டும்.
மீனவர்கள் கடல்சார் பழங்குடியினர் என அறிவிக்கப் படவேண்டும், இலங்கை கடற்படை கைப்பற்றிய தமிழக மீனவர்களின் படகுகளையும் மீனவர்களையும் விடுவிக்கவேண்டும். மீனவர்களுக்கான தனி அமைச்சகம் அமைக்கப்படவேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசியல்கட்சித் தலைவர்களை சந்திப்பது என்றும் அரசியல்கட்சிகள் இந்தக் கோரிக்கைகளை தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத பட்சத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை மீனவர் சங்கங்களுடன் இணைந்து புறக்கணிக்க முடிவு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. என்று கருத்தரங்கில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அவர்களது கருத்துகளை கூறினர்.
நிகழ்ச்சியில் தங்கச்சிமடம் சின்னத்தம்பி, காணிக்கைதாஸ், வழக்கறிஞர் கதிர்வேல், ரவி, தங்கச்சிமடம் இருதயமேரி, பத்திரிகையாளர் ப. திருமலை உள்ளிட்ட பலர் பேசினர். சவேரியார் சாவடி போஸ்கோ நன்றி கூறினார்.
வழக்கறிஞர், சி.சே. இராசன்,
செய்தியாளர் ( தினசரி தமிழ் செய்தித் தளத்தின் வாசகர் )