
மத்திய அரசின் ஆதார் ஆணையம் (UIDAI) ஆதார் ரீபிரிண்ட் சேவை நிறுத்தப்பட்டுவிட்டதாக தற்போது அறிவித்துள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் ஆதார் பிவிசி கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. இந்த ஆதார் அடையாள அட்டை இல்லாமல் அரசின் சலுகைகளை பெற முடியாது.உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம்.
கண்ணின் விழித்திரை, கைரேகை, இவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, மற்ற புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்பட்டு இந்த ஆதார் அட்டை பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
மேலும் இது பிற அடையாள அட்டைகளிலிருந்து முற்றிலும் தனிப்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை ஒரு முறை ஒருவருக்கு வழங்கப்பட்டு விட்டால் வாழ்நாள் முழுவதும் அது அவருக்குரியதே. வேறு எவருக்கும் அந்த எண் வழங்கப்படமாட்டாது.
தற்போது ட்விட்டரில் ஒருவர் ஆன்லைனில் ஆதார் ரீபிரிண்ட் செய்ய முடியவில்லை என புகார் அளித்துள்ளார். அந்த நபருக்கு UIDAI, “ஆதார் ரீபிரிண்ட் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது” என்று பதில் அளித்துள்ளது. எனினும் ஆதார் பிவிசி கார்டு பெற இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். அல்லது, இ-ஆதார் ஆவணத்தை பிரிண்ட் செய்து பயன்படுத்தலாம் என UIDAI தெரிவித்துள்ளது.