சகாயம் அறிக்கைக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க அவகாசம் : சென்னை உயர்நீதிமன்றம்

 
கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயம் குழு தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு மேலும் 6 வார கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
தமிழக கிரானைட் முறைகேடு குறித்து சிறப்பு விசராணைக்குழு அமைக்கவும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி 2013ல் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி அமர்வு, ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான விசாரணைக்குழு அமைத்து 2014ல் உத்தரவிட்டது.
கடந்த நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தார். அதன்படி, மதுரை மாவட்டத்தில் மட்டுமே 1,06,000 கோடி அளவுக்கு கிரானைட் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை செய்ய தனி நீதிமன்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தார்.
 
அரசு அதிகாரிகளின் துணையில்லாமல் இந்த முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்பதால், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டுமென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக , தமிழக அரசு அறிக்கையை ஆய்வு செய்து பதிலளிக்க கால அவகாசம் வழங்கி வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்து.
 
இந்நிலையில் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுன், நீதிபதி புஷ்பா சத்யநாராயணனா ஆகியோர் முன்னிலையில் இன்று வழக்கு விசராணைக்கு வந்தது.
தமிழகஅரசு தரப்பில் ஆஜரான, அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி, அறிக்கையை ஆய்வு செய்து வருவதாகவும், விரிவான விளக்கமளிக்க மேலும் 4 வார கால அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று கொண்ட நீதிபதிகள் தமிழக அரசுக்கு 6 வார கால அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 15ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர் .