குறிசொல்பவர் போல் வந்து செல்போன் திருட்டு: 3 பேர் கைது

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே குறி சொல்பவர்கள் போல் வந்து செல்போன் திருடிச் சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே திருவயலூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் அர்ஜுனன்(45). இவர் புளியம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவர், வியாழன் அன்று காலை வயலில் வேலை செய்யச் சென்றபோது, வீட்டில் அவரது மனைவி மட்டும் இருந்தாராம். இந்நிலையில், அவரது வீட்டுக்கு குறி சொல்பவர்கள் போல், காலை 3 பேர் வந்துள்ளனர். வெளியில் யாரும் இல்லாததை அறிந்த அவர்கள், சுவரில் வைக்கப்பட்டிருந்த செல்போனை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், குறிசொல்வதாக மூன்று பேர் வந்ததாக மனைவி கூறியதையடுத்து, அர்ஜுனன் போச்சம்பள்ளி பேருந்து நிலையம், கல்லாவி சாலை, சந்தூர் சாலை அகிய இடங்களில் தேடிப் பார்த்ததில் மூன்று பேர் சந்தூர் சாலையில் நடந்து சென்றது தெரிய வந்தது. அதையடுத்து, அவர்களிடம் இருந்த தனது செல்போனை பறிமுதல் செய்த அர்ஜுனன், அவர்களை போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில், அவர்கள் மூவரும் கிருஷ்ணகிரி அருகே சிக்காரிமேடு பகுதியைச் சேர்ந்த சக்காரட்டி மகன் பிரபுதேவா (24), கரிசந்திரம் பேரிகை பகுதியைச் சேர்ந்த நம்பியார் மகன் சில்வேசா (28), அதே பகுதியைச் சேர்ந்த கிராமரெட்டி மகன் கோவிந்தராஜ் (24) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போச்சம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, போச்சம்பள்ளி நடுவர் நீதிமன்றத்தில் மூவரையும் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளைச் சிறையில் அடைத்தனர்.