விஐபி தரிசனத்துக்கு போலி அடையாள அட்டை: சபரிமலையில் சென்னை நபர் கைது

திருவனந்தபுரம்:

சபரிமலையில் வி.ஐ.பி. தரிசனத்துக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டின் போலி அடையாள அட்டை தயாரித்து பக்தர்களிடமிருந்து பணம் வசூலித்த சென்னையைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகரவிளக்கு பூஜை நடைதிறப்பு என்பதால், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர் கூட்டம் அதிகம் என்பதால், விரைந்து தரிசனத்தை முடித்துத் திரும்ப, சிலர் முக்கிய பிரமுகர்களிடம் இருந்து சிபாரிசுக் கடிதத்துடன் வருகின்றனர். இப்படி வருபவர்கள் சிலர் போலியான கடிதத்துடன் வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சிபாரிசுக் கடிதங்களை தீவிரமாக பரிசோதிக்க, பாதுகாப்பு அதிகாரி ஏ.டி.ஜி.பி. பத்மகுமார் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் சிபாரிசுக் கடிதங்களை போலீசார் தீவிரமாக பரிசோதனை செய்யத் தொடங்கினர். அப்போது, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த 5 பேர் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் அடையாள அட்டையுடன் சபரிமலைக்கு வந்ததையும், அவர்களின்அடையாள அட்டையைப் பரிசோதித்த போது, அது போலியானது என்பதும் தெரியவந்தது.

அவர்களிடம் விசாரித்த போது, சன்னிதானத்தில் வைத்து ஒருவரிடம் ரூ.4,050 கொடுத்து அடையாள அட்டையை வாங்கியதாக அவர்கள் கூறினர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ராஜேந்திரன் (49), என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் சென்னை தாம்பரம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் என்பதும், கடந்த சில வாரங்களாக சன்னிதானத்தில் தங்கியிருந்து திருவிதாங்கூர் தேவசம் போர்டின் போலி அடையாள அட்டையை தயாரித்து வந்ததும் தெரியவந்தது. ஒரு அடையாள அட்டைக்கு ரூ.4,050 பணம் வசூலித்துள்ளார். இதுவரை 50க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு போலி அடையாள அட்டையை தயாரித்துக் கொடுத்துள்ளார். இதன் மூலம் ரூ.2 லட்சம் வரை வசூலித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணைக்குப் பின் ராஜேந்திரனை ரான்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.