பலியானவர் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்யக் கோரி பிணத்துடன் உறவினர்கள் மறியல்

கண்ணமங்கலம்: பலியானவர்களின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரி, பிணத்துடன் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் பலியான திருவண்ணாமலை வேட்டகிரி பாளையத்தைச் சேர்ந்த சசிக்குமார், முருகன், பெருமாள் ஆகியோர் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தன. 3 பேரின் உடல்களைக் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் 3 பேரின் உடல்களையும் எடுத்துச் சென்று, படவேடு பிரதான சாலைக்கு ஊர்வலமாகக் கொண்டு வந்தனர். உடல்களை நடுவில் வைத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். பிணத்தை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்தப் போராட்டத்தால் வேலூர்–திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.