ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

புது தில்லி:

மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்த ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில், மாறன் சகோதரர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கிய விவகாரத்தில், அன்னியச் செலாவணி நிதிப் பரிவர்த்தனை முறைகேடு நடந்ததாக மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி உள்பட ஆறு பேருக்கு எதிராக தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அவரது பதவிக் காலத்தில் ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை கட்டாயப்படுத்தி அவரது நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க தயாநிதி மாறன் நெருக்குதல் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

2011ஆம் ஆண்டில், இந்தக் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில், ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரன் சிபிஐயில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் 2013-இல் சிபிஐ வழக்குத் தொடுத்தது.

“ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் வாங்கியவுடன் அதற்குப் பிரதிபலனாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் டிவி நிறுவனத்தில், பல்வேறு நிறுவனங்கள் மூலம் மேக்சிஸ் நிறுவனம் ரூ.742 கோடி அளவுக்கு முதலீடு செய்தது. இதன் மூலம் தனது அதிகாரத்தை தயாநிதி மாறன் தவறாகப் பயன்படுத்தியதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

சிபிஐ., தொடர்ந்த இந்த வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவனர் டி. அனந்தகிருஷ்ணன், அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் மார்ஷல் ஆகியோருக்கு எதிராகவும், சன் டைரக்ட் டிவி, சௌத் ஏசியா எஃப்எம், எஸ்ஏம்டிஎல் (மோரீஷியஸ்), ஏஎச் மல்டிசாஃப்ட் ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு எதிராகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் ஜன.8 வெள்ளிக்கிழமை மத்திய அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அதில், “வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் சன் டைரக்ட் டிவி நிறுவனத்துடன் மேக்சிஸ் நிறுவனம் மேற்கொண்ட நிதிப் பரிவர்த்தனையில் அன்னியச் செலாவணி மோசடி நடந்துள்ளது’ என்று கூறியுள்ளது. மத்திய நிதியமைச்சராக ப. சிதம்பரம் இருந்த போது, வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்ய அனுமதி வழங்கியதில் உரிய விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், இதில் சிதம்பரத்தின் பங்கு, வெளிநாட்டு நிறுவனங்களுடன் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு உள்ள பங்கு குறித்து விசாரித்து வருவதாகவும் மத்திய அமலாக்கத் துறை கூறியுள்ளது.