தமிழகத்தில் சட்டவிரோதமாக கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு புகையிலை விற்பனைக்கு அனுமதி : ராமதாஸ் குற்றசாட்டு

 
புகையிலை தடை
தமிழக ஆட்சியாளர்கள் சட்டவிரோதமாக விற்பனையாளர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு, மக்களுக்கு தீமையை ஏற்படுத்தும் பொருட்களின் விற்பனையை அனுமதித்துள்ளனர் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் மருத்துவர் ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-
சென்னை இளைஞர்களிடையே அதிகரித்து வரும் புகையிலை கலாச்சாரம் குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள ஆபத்துக்கள் குறித்தும் அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. புகையிலையால் ஏற்படும் ஆபத்து உடனே தடுக்கப்படவேண்டும்.
 
சென்னையில் செயல்பட்டு வரும் இந்தியாவின் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவமனைகளில் ஒன்றான அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனம் சென்னையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் விவரங்களைத் தொகுத்து வருகிறது.
 
அந்த புள்ளிவிவரங்களின்படி சென்னையில் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் 416% அதிகரித்திருக்கிறது.
 
1982 ஆம் ஆண்டு வாக்கில் 15 முதல் 34 வயது வரையுள்ள இளைஞர்களில் 10 லட்சம் பேரில் 6 பேர் மட்டுமே வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இப்போது இந்த எண்ணிக்கை ஐந்து மடங்காக அதாவது 31 பேராக அதிகரித்திருக்கிறது. வாய்ப்புற்று நோய் எனப்படுவது நாக்கு மற்றும் உட்புற கன்னங்களில் ஏற்படுவது ஆகும். நாக்கில் ஏற்படும் புற்றுநோய் தான் அதிக அளவில் இளைஞர்களைத் தாக்குகிறது.
 
30 ஆண்டுகளுக்கு முன் 10 லட்சம் பேரில் இருவருக்கு மட்டுமே இந்த வகை புற்றுநோய் ஏற்பட்டது. இப்போது இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கு 15 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 650% அதிகரித்திருக்கிறது.
 
அதேபோல் கன்னங்களில் புற்றுநோய் ஏற்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கு 4 என்ற அளவிலிருந்து 300% அதிகரித்து 16 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் இளைஞர்களில் சராசரியாக 730 பேர் புற்றுநோயால் புதிதாக பாதிக்கப்படுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 
இதில் நிம்மதியளிக்கும் விஷயம் என்னவெனில் இளம்பெண்களுக்கு வாய்ப்புற்றுநோய் ஏற்படும் விகிதம் 33% குறைந்திருக்கிறது என்பது தான். அதேநேரத்தில் இளம்பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது 200% அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சத்திற்கு 730 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது கேட்பதற்கு சிறிய எண்ணிக்கையாக தோன்றலாம்.
 
ஆனால், இந்த எண்ணிக்கை இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலத்தை நாசமாக்கிவிடும் ஆபத்து உள்ளது. இந்த பாதிப்புகள் அனைத்துக்கும் காரணம் இளைய தலைமுறையினரிடையே அதிகரித்து வரும் புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்களை மெல்லும் பழக்கம் தான்.
 
சிகரெட் பிடித்து புகையிலை புகையை உள்ளுக்குள் நன்றாக இழுத்து வெளிவிடுவதால் ஏற்படும் பாதிப்புகளை விட, புகையிலையை மென்று துப்புவதால் ஏற்படும் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும் என்ற மூட நம்பிக்கையும், மெல்லும் புகையிலையை அலுவலகத்திற்கு உள்ளேயும் எளிதாக பயன்படுத்த முடியும் என்ற வசதியும் இளைஞர்களிடையே வாய்ப்புற்றுநோய் அதிகரிக்க காரணமாகும்.
 
இளைஞர்களிடையே வாய்ப்புற்றுநோயை தடுக்க வேண்டுமானால் மெல்லும் புகையிலை மற்றும் போதைப் பாக்குகளின் விற்பனை முழுமையாக தடை செய்யப்பட வேண்டும்.
 
ஆனால், தமிழ்நாட்டில் அந்த நிலைமை இல்லை. மத்தியில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்த போது கொண்டுவரப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் கடந்த 08.05.2013 அன்று தமிழ்நாட்டில் மெல்லும் புகையிலை மற்றும் போதைப் பாக்குகள் தடை செய்யப்பட்டன.
 
அதன்படி தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்வது, இருப்பு வைப்பது, விற்பனை செய்வது ஆகியவை தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
 
ஆனால், இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
 
தமிழகத்தில் மொத்தம் 26 வகையான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் 3 பொருட்கள் தமிழ்நாட்டிலேயே தயாரித்து விற்கப்படுகின்றன.
 
அனைத்து துறைகளிலும் தலைவிரித்தாடும் ஊழல் போதைப் பாக்குகள் மற்றும் புகையிலையையும் விட்டு வைக்கவில்லை. இவற்றின் விற்பனையாளர்களிடம் ஆட்சியாளர்கள் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு, மக்களுக்கு தீமையை ஏற்படுத்தும் பொருட்களின் விற்பனையை சட்டவிரோதமாக அனுமதிக்கின்றனர். இது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
 
இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை அழிக்கும் ஆபத்து கொண்ட எல்லா புகையிலைப் பொருட்களின் விற்பனையையும் முற்றிலுமாக தடுக்கவும், அதன்மூலம் வாய்ப்புற்று நோய் உள்ளிட்ட உயிரைப் பறிக்கும் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்கவும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசாங்கம் முன்வர வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.