நடிகர் சங்க கட்டட பூமி பூஜைக்கு வர ஜெயலலிதா சம்மதம்

சென்னை: நடிகர் சங்கத்தின் சார்பில் ரூ. 1.10 கோடி வெள்ள நிவாரணம் கொடுக்கப்பட்டதுடன், நடிகர் சங்க கட்டட பூமி பூஜை விழாவுக்கு வர வேண்டும் என்று விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று  முதல்வர் ஜெயலலிதா சம்மதம் சொன்னதாக நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் எம். நாசர் ரூ.1 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் முதல்வரிடம் வழங்கினார்.

இதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவுடனான சந்திப்பு குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணை தலைவர் கருணாஸ் கூறிய போது, “தென்னிந்திய நடிகர் சார்பில் வெள்ள நிவாரண நிதியாக ரூ. 1 கோடியே 10 லட்சம் முதல்வரிடம் அளித்தோம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டட துவக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று முதல்வரிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தோம். அதே கோரிக்கையை இந்த முறை தலைவர் நாசரும், பொதுச் செயலாளர் விஷாலும் முன் வைத்தார்கள். முதல்வரும் நிச்சயமாக பூமி பூஜையில் கலந்து கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.” என்று கூறினார்.