ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

 
மத்திய அரசு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன.
காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியின் போது துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் புகார் கூறினார்கள். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்தது. இதனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
 
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தமிழக அரசும் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசை வற்புறுத்தி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
 
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் மாட்டு வண்டி போட்டிகளை நடத்த மத்திய அரசு கடந்த 8–ந் தேதி அனுமதி வழங்கி அறிவிக்கையை மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது.
 
 
இதனால் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களிலும், திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
 
இதற்கிடையே, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் இருப்பதாக விலங்குகள் நல அமைப்புகள் ஆர்வலர்களும் மற்றும் குற்றம்சாட்டி மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
 
இந்த நிலையில், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் சார்பிலும், 9 தனி நபர்கள் சார்பிலும், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இது நாள் வரை மொத்தம் 13 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
 
அந்த மனுக்களில், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் பிற மாநிலங்களில் மாட்டு வண்டி பந்தயம் நடத்த அனுமதித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இவற்றில் இரு மனுக்கள் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான மனுக்கள் ஆகும். அதாவது, மத்திய அரசின் அறிவிக்கை நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் உள்ளதாக அவற்றில் கூறப்பட்டு உள்ளது.
 
நேற்று மனுதாரர்கள் தரப்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சி.எஸ்.தாக்குர் மற்றும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்டது.மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கே.கே.வேணுகோபால், அரிமா சுந்தரம், ஆனந்த் குரோவர் மற்றும் சித்தார்த் லுத்ரா கியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
 
அவர்களது வாதத்தின் போது உச்ச நீதிமன்றத்தில் கூறியதாவது:–
 
ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த 2014–ம் ஆண்டு மே 7–ந் தேதி வழங்கிய தீர்ப்க்கு எதிராக வெளியிட்டுள்ள அறிவிக்கை, முற்றிலும் மத்திய அரசு நீதிமன்றத்தை அலட்சியப்படுத்துவதாக உள்ளது. ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் ஆகியவை பாரம்பரியமான விளையாட்டுகள் என்றும், இந்த விளையாட்டில் கலந்து கொள்ளும் காளைகள் எந்த வகையிலும் கொடுமைப்படுத்த கூடாது என கூறப்பட்டு உள்ளது.
 
ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் காளைகள் தானாகவே ஓடுவதற்கோ அல்லது பந்தயத்தில் கலந்துகொள்வதற்கோ ஏற்றவை அல்ல என்றும், அவை வலுக்கட்டாயமாக போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் போது மிகவும் சோர்வடைகின்றன என்றும் ஏற்கனவே தனது தீர்ப்பில் கூறி உள்ளது. இதுபோன்ற போட்டிகள் காளைகளின் நலனுக்கு எதிரானது என்றும் உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது.
 
ஜல்லிக்கட்டு போட்டி சட்டத்துக்கு எதிரானது. இந்த போட்டி மிருகவதை தடை சட்டத்தை மீறும் வகையில் நடத்தப்படுகிறது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, அறிவிக்கை மூலம் மத்திய அரசு மீறுவது சட்டவிரோதமானது. எனவே, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். என மூத்த வழக்கறிஞர்கள் கூறினார்கள்.
 
அவர்களுடைய வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த மனுக்கள் 12-01-2016 (இன்று) விசாரிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.அதன்படி, இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணை நடைபெறவுள்ளன.
 
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு தொடரப்பட்டால் அது தொடர்பாக தமிழக அரசின் கருத்தை கேட்க வேண்டும் என்றும், வழக்கு விசாரணையில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொண்டு தங்கள் தரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு ஏற்கனவே கோரிக்கை விடுத்து ‘கேவியட்’ மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது