குமரி அருகே ரூ.1 லட்சத்துக்கு 5 மாத குழந்தை விற்பனை: 4 பேர் கைது

நாகர்கோவில்:

குமரி அருகே ரூ.1 லட்சத்துக்கு 5 மாத குழந்தையை விற்பனை செய்ததாக தந்தை உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியது…

கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் கீழச்சாலையை சேர்ந்த தம்பதி வரதராஜன் (42) அமலா (37). இவர்களுக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் கடந்த மாதம் 31ஆம் தேதி வரதராஜன், 5 மாத ஆண் குழந்தையுடன் வீட்டுக்கு வந்தார். அந்தக் குழந்தையை தத்தெடுத்து வந்ததாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 2 நாட்களாக அந்த குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. இதனால் அருகில் உள்ளவர்கள், நாகர்கோவிலில் உள்ள குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் குழந்தைகள் உதவி மைய பணியாளர் மேரிபெனி நேரில் சென்று விசாரித்தபோது வரதராஜன் அந்தக் குழந்தையை ரூ.1 லட்சம் கொடுத்து வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டருக்கு மேரிபெனி தகவல் கொடுத்தார். அதன் பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய போது,அந்தக் குழந்தை கொட்டாரம் லட்சுமிபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (23)-மாரி மணிமாலா (21) தம்பதியரின் குழந்தை என்றும், இவர்களுக்கு சூர்யா (1½) மற்றும் நிதிஷ்குமார் (5 மாதம்) ஆகிய ஆண் குழந்தைகள் உள்ளதாலும், கட்டடத் தொழிலாளியான சதீஷ்குமார் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்ததாலும், குழந்தையை விற்றது தெரியவந்தது. இதற்கு ஒரு புரோக்கர் கும்பல் சதீஷ்குமாரை சந்தித்து ரூ.1 லட்சம் பணத்துக்கு குழந்தையை விற்குமாறு ஆசை வார்த்தை கூறியதும், அதன்படி வரதராஜன் ரூ.1 லட்சம் கொடுத்து குழந்தையை வாங்கியதும் தெரியவந்தது.

இது குறித்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உத்தரவிட்டதன் அடிப்படையில் தென்தாமரைகுளம் போலீசார், வழக்கு பதிவு செய்தனர். குழந்தையை விற்ற சதீஷ்குமார், அதனை வாங்கிய வரதராஜன், இதற்கு உதவியாக இருந்த அவருடைய உறவினர் சரவணந்தேரியை சேர்ந்த தங்கநாடார் (66), லட்சுமிபுரத்தை சேர்ந்த புரோக்கர் ஆதிலிங்கம் (37), அவருடைய மனைவி விமலா ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவர்களில் சதீஷ்குமார், வரதராஜன், தங்கநாடார், விமலா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆதிலிங்கம் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். விற்பனை செய்யப்பட்ட குழந்தை மீட்கப்பட்டு தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது.