-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-
சென்னை சூப்பர் கிங்க்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
தொடக்கவிழா
சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று (22 மார்ச்சு 2024) ஐ பி எல் 2024 போட்டி கோலாகலமாகத் தொடங்கியது. கலை நிகழ்ச்சிகளில் பாலிவுட் நடிகர்களான அக்ஷய்குமார், ஜாக்கி ஷெராஃபின் மகனான டைகர் ஷெராஃப் ஆகியோர் நடனமாடினர். இசையமைப்பாளர் A.R, ரஹ்மான் வந்தேமாதரம் பாடலைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். A.R, ரஹ்மான் இசைக் குழுவினருடன் சோனு நிகம் அவர்களும் பாடினார். வாணவேடிக்கைகளுடன் தொடக்க விழா இனிதே நிறைவுற்றது. தமிழ்நாடு கிரிக்கட் அசோஷியேசனின் தலைவர் டாக்டர் அசோக் சிகாமணி (அமைச்சர் டாக்டர் பொன்முடியின் மகன்), இந்திய கிரிக்கட் வாரியத்தின் தலைவர் ஜெய்ஷா ஆகியோர் தொடக்க ஆட்டத்தைக் காணவந்திருந்தனர்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் முதல் போட்டியை நடிகர் தனுஷ் தனது பாடிகார்டுகளுடன் வந்து பார்த்து ரசித்தார். தங்கை ஷாமிலியுடன் அஜித் மனைவி ஷாலினி ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்தார். நடிகர் ஜெயம் ரவி மனைவியுடன் சேப்பாக்கம் வந்து மேட்ச்சை பார்த்து ரசித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தல தோனியின் தீவிர ரசிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் சதீஷும் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியை சேப்பாக்கம் வந்து கண்டு ரசித்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ராயல் சேலஞ்சர்ஸ் அணியை (173/6, அனுஜ் ராவத் 48, தினேஷ் கார்த்திக் 38*, டியு பிளசிஸ் 35, கோலி 21, முஸ்தஃபிகுர் ரஹ்மான் 4/29) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி (18.4 ஓவர்களில் 176/4, ரச்சின் ரவீந்திரா 37, ஷிவம் துபே 34*, ரஹானே 27, ஜதேஜா 25, கிரீன் 2/27) ஆறு விக்கட் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையாவில் பெங்களூரு அணி வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ட்யு பிளெசிஸ் (35), விராட் கோலி (21) ஆகியோர் 4.3 ஓவரில் 41 ரன்கள் சேர்த்தனர். நடுவில் அந்த அணியின் இன்னிங்ஸ் தடுமாறியது. கடைசியில் அனுஜ் ராவத் (48), தினேஷ் கார்த்திக் (38) ஆகியோர் ஆர்சிபியின் ஸ்கோரை 173 ரன்களுக்கு கொண்டு சென்றனர்.
ஆர்சிபி நிர்ணயித்த 174 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு 38 ரன்னில் முதல் விக்கட் விழுந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 15 ரன்களில் வெளியேறினார். இருப்பினும், இளம் பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திரா, 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு ஷிவம் துபே (34), ரவீந்திர ஜதேஜா (25) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழாமல் ஆடியதால் சிஎஸ்கே 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. இதில் ஷிவம் துபே சிஎஸ்கே அணி பேட்டிங்க் செய்யும்போது இம்பேக்ட் பிளேயராக முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கப் பதிலாக இறங்கினார்.
2008 ஐபிஎல் போட்டிக்குப் பிறகு சென்னை அணியை இன்னமும் பெங்களூர் அணி சேப்பாக்கத்தில் வீழ்த்த முடியவில்லை. முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.