-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-
இரண்டாம் நாள் ஆட்டங்கள் – 23.03.2024
ஐபில் 2024 தொடங்கிய இரண்டாம் நாளான இன்று, சனிக்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையில் பஞ்சாப், சண்டிகருக்கு அருகில் உள்ள முல்லன்பூரில் உள்ள மஹராஜா யதுவிந்தரசிங் மைதானத்தில் நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் கொல்கொத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது.பஞ்சாப் vs டெல்லி
டெல்லி அணியை (174/9, அபிஷேக் போரல் 32*, ஷாய் ஹோப் 33, வார்னர் 29, மார்ஷ் 20, அக்சர் படேல் 21, அர்ஷதீப் 2/28, ஹர்ஷல் 2/47) பஞ்சாப் அணி (19.2 ஓவரில் 177/6, சாம் கரன் 63, விலிங்க்ஸ்டோன் 38, பிரப்சிம்ரன் சிங் 26, ஷிகர் தவான் 22, கலீல் அகமது 2/43, குல்தீப் 2/20) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. முதல் ஆறு ஓவர்கள் பவர் பிளே ஓவர்கள். அதில் டெல்லி அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்தது. முதல் நாலு பேட்ஸ்மென்களும் நன்றாக ஆடினர். 17.2ஆவது ஓவரில் அபிஷேக் போரல் ஆடவந்தார். அவர் ஒரு இம்பேக்ட் பிளேயெர். அந்த ஓவரின் மீதமுள்ள 4 பந்துகளில் அவர் 6 ரன் எடுத்தார். இருபதாவது ஓவரில் 4, 6, 4, 4, 6 என அபாரமாக ஆடினார். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பிறகு ஆடவந்த பஞ்சாப் அணி பவர்பிளேயில் 2 விக்கட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சாம் கரன் 47 பந்துகளில் 6 ஃபோர் ஒரு சிக்சருடன் 63 ரன்கள் எடுத்தார். லியம் லிவிங்க்ஸ்டோன் 21 பந்துகளில் 2 ஃபோர், 3 சிக்சர்களுடன் 38 ரன்கள் எடுத்தார். இதனால் 19ஆவது ஓவரில் இரண்டு அடுத்தடுத்த விக்கட்டுகள் விழுந்தபோதிலும் பஞ்சாப் அணி ஆறு விக்கட்டுகள் இழப்பிற்கு 177 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சாம் கரன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
கொல்கொத்தா vs ஹைதராபாத்
கொல்கொத்தா அணி (208/7 ரசல் 64*, பில் சால்ட் 54, ரமன்தீப் சிங் 35, ரிங்கு சிங் 23, நடராஜன் 3/32, மார்கண்டே 2/39) சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை (ஹென்றிச் கிளாசன் 63, மயங்க் அகர்வால் 32, அபிஷேக் ஷர்மா 32, ராகுல் திரிபாதி 20, மர்க்ரம் 18, ஹர்ஷித் ராணா 3/33, ரசல் 2/25) 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. கொல்கொத்தா அணியில் சுனில் நரேன் (2 ரன்), வெங்கடேஷ் ஐயர் (7 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (பூஜ்யம் ரன்) நிதீஷ் ராணா (9 ரன்) ஆகியோர் மோசமாக ஆடினர். ஆனால் மறுபுறம் பில் சால்ட் 40 பந்துகளில் 54 ரன் குவித்தார். 13.5ஆவது ஓவரில் சால்ட் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 119/6. 16ஆவது ஓவரில் ரசல் மூன்று சிக்சர் அடித்தார். 17ஆவது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார். 18ஆவது ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸ். 19ஆவது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு போர் அடித்தார். 20ஆவது ஓவரை நடராஜன் திறமையாக வீசியதால் அதிக ரன் எடுக்க முடியவில்லை. 20 ஓவர் முடிவில் கொல்கொத்தா அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 208 ரன் எடுத்தது.இதன் பின்னர் ஆடவந்த சன் ரைசர்ஸ் அணி முதல் ஐந்து ஓவர்கள் வரையிலும் சிறப்பாக ஆடியது. அதன் பின்னர் சுனில் நரேன் வீசிய நான் கு ஓவர்களில் (ஒவர் 4, மெய்டன் இல்லை, 19 ரன், ஒரு விக்கட்) ஆட்டம் திசை மாறியது. சுனில் தன்னுடைய நாலு ஓவரையும் வீசி முடிக்கும்போது, 13ஆவது ஓவர் முடிவில் சன் ரைசர்ஸ் அணி 4 விக்கட் இழப்பிற்கு 111 ரன் எடுத்திருந்தது. அதன் பின்னர் ஹென்றிச் கிளாசன் அதிரடியாக ஆடினார். அவர் 29 பந்துகளில் 8 சிக்சர் அடித்து 63 ரன்கள் எடுத்தார். இருப்பினும் சன்ரைசர்ஸ் அணியால் 20 ஓவரில் ஏழு விக்கட் இழப்பிற்கு 204 ரன் கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கொத்தா அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரூ ரசல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.