வெள்ள நிவாரணம் வழங்குவதில் மன உளைச்சல்: கிராம உதவியாளர் தற்கொலை

கடலூர்:
ஸ்ரீமுஷ்ணம் அருகே வெள்ள நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்ட மனஉளைச்சலால் கிராம உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை அடுத்து கிராம உதவியாளர் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் வடக்குப் பாளையத்தைச் சேர்ந்தவர் த.ராஜாராமன் (52). சோழதரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கிராம உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவரை சிலர் திட்டியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், ராஜாராமன் செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது மனைவி லட்சுமி (52) கொடுத்த புகாரின் பேரில் சோழதரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ராஜாராமனுக்கு தர்மவீரன்(24), ஆனந்தஜோதி(22), ராஜேஷ்(19) ஆகிய 3 மகன்களும், திவ்யபாரதி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், இறந்த ராஜாராமனின் உறவினர்கள் ஒன்று திரண்டு பாளையங்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே காட்டுமன்னார்கோவில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இவ்வழக்கு குறித்து உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.