ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் கல்யாண உத்ஸவம்! நிச்சயதார்த்த நிகழ்வில் தமிழக எம்.எல்.ஏ., பங்கேற்பு!

Published:

ariyankavu kalyana utsav1 - 2026
ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண உத்ஸவத்தில் செவ்வாய் இரவு நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்வு, பாண்டியன் முடிப்பு (படம்: இசக்கி)

கேரள மாநிலம் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் ஆரியங்காவு தர்ம சாஸ்தா சுவாமிக்கும் புஷ்கலா தேவிக்கும் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவான பாண்டியன் முடிப்பு, திருக்கல்யாணம், நிகழ்வை ஏராளமானோர் தரிசித்தனர்.

சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது முதல் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலிலும் திருவிழா நடந்து வருகின்றது. இந்த ஆலயத்தில் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த புஷ்கலா தேவிக்கும் சுவாமி ஐயப்பனுக்கும் திருமணம் நடப்பதற்கு முன் பாண்டியன் முடிப்பு என்னும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை மதியம் சமபந்தி விருந்து நடைபெற்றது. மாலையில் தாலிப்பொலி ஊர்வலம் எனும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், சன்னிதானம் முன் துவங்கியது. இதில் புஷ்கலா தேவி அம்பாள் சார்பில் மதுரை சௌராஷ்டிரா சமூகத்தினர் 21 தட்டுகளில் நிச்சயதார்த்த சடங்குகளுக்கு உரிய பொருட்களுடன் ராஜகொட்டாரம் வந்தனர்.

தர்மசாஸ்தா சார்பில் திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் 3 தட்டுகளை கர்ப்பக் கிரகத்தில் இருந்து எடுத்து வந்து ராஜகொட்டாரத்தில் பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக ஊர்மக்களின் பெண் அழைப்பு ஊர்வலம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான கேரள மாநில பெண்கள் விளக்கேந்தி ஊர்வலமாக ஆலயம் நோக்கி வந்தனர்.இந்த திருமண நிச்சயதார்த்த விழாவில் பெண் வீட்டு சார்பில் மதுரை தெற்கு தொகுதி உறுப்பினர் சரவணன் கலந்துகொண்டார்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

சபரிமலை ஐயப்பன் கோவிலைப் போன்று, இந்தக் கோவிலில் இருக்கும் ஐயப்பன் பிரம்மசாரியாக இல்லாமல், புஷ்கலையைத் திருமணம் செய்து குடும்பத்தவராகக் காட்சி தருகிறார்.

இங்கிருக்கும் ஐயப்பனுக்குத் திருமணம் நடந்தது பற்றி சுவையான கதை ஒன்றும் உண்டு!

மதுரையைச் சேர்ந்த சௌராஷ்டிரா வகுப்பினர், திருவிதாங்கூர் மகாராஜாவின் அரண்மனைக்குத் தேவையான துணிகளை நெசவு செய்து கொண்டு போய் விற்பனை செய்து வந்தனர். அப்படிச் சென்ற வணிகர்களில் ஒருவர், ஒரு முறை தனது மகள் புஷ்கலையையும் உடன் அழைத்துக் கொண்டு திருவிதாங்கூர் சென்றார். அவருக்கு மகள் புஷ்கலையைக் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் செல்வது மிகவும் கடினமாக இருந்தது.

அவர்கள் இருவரும் ஆரியங்காவு கணவாய்ப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். புஷ்கலை அதற்குள்ளாகவே மிகவும் களைத்துப் போயிருந்தாள். இனி அவளை திருவிதாங்கூருக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று நினைத்த அந்த வணிகர், அங்கிருந்த சாஸ்தா கோவிலின் தலைமை அர்ச்சகரைச் சந்தித்து, தான் திருவிதாங்கூர் சென்று திரும்பி வரும் வரை, தனது மகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி ஒப்படைத்துச் சென்றார்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

சாஸ்தா கோவிலின் தலைமை அர்ச்சகரின் வீட்டில் தங்கிய புஷ்கலை, சாஸ்தா கோவிலுக்குத் தேவையான பணிகளைச் செய்து வந்தார். நாளடைவில், அவரது மனத்தில் அந்தக் கோவிலில் இருக்கும் சாஸ்தாவையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.

இந்நிலையில், புஷ்கலையின் தந்தை திருவிதாங்கூர் சென்று துணிகளை விற்பனை செய்துவிட்டுத் திரும்பி கொண்டிருந்தார். வரும் வழியில் அவரை, மதம் பிடித்த யானை ஒன்று விரட்டத் தொடங்கியது. அதனைக் கண்டு பயந்த அவர் வேகமாக ஓடத் தொடங்கினார். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞன், அந்த மத யானையை அடக்கி அவரைக் காப்பாற்றினான்.

தன்னைக் காப்பாற்றிய இளைஞனுக்கு நன்றி தெரிவித்த அவர், அந்த இளைஞனுக்கு என்ன வேண்டுமென்று கேட்டார். அந்த இளைஞன், ‘உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து தாருங்கள்’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான். அதன் பிறகு, வணிகர் ஆரியங்காவு வந்து சேர்ந்தார்.

ஆரியங்காவிலுள்ள சாஸ்தா கோவிலுக்குச் சென்ற வணிகருக்கு, கோவில் கருவறையிலிருந்த சாஸ்தாவின் உருவம், காட்டில் மத யானையிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய இளைஞரின் உருவமாகத் தெரிந்தது.

தனது மகளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியே சாஸ்தா, காட்டிற்குள் மதம் பிடித்த யானையைக் கொண்டு, நம்மை ஓடச் செய்து காப்பாற்றியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டார்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அதன் பிறகு வணிகர், அந்தக் கோவில் அர்ச்சகரிடம் காட்டில் நடந்த கதையைச் சொல்லித் தன் மகள் புஷ்கலையை சாஸ்தாவிற்குத் திருமணம் செய்து கொடுக்கப் போவதாகச் சொன்னார். அர்ச்சகரும், கோவில் உயர் அதிகாரிகளுக்கு அந்தத் தகவலைத் தெரிவித்து வரச் செய்தார். வணிகரும், தனது ஊரான மதுரையிலிருந்து தனது உறவினர்களை வரச் செய்தார்.

அதன் பிறகு, சாஸ்தாவிற்கும் புஷ்கலைக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சாஸ்தாவான ஐயப்பன், புஷ்கலையை மனைவியாக ஏற்றுத் தன்னுடன் ஆட்கொண்டார் என்று இக்கோவிலில் ஐயப்பன், புஷ்கலை திருமணம் நடந்த கதை மரபு வழியாகச் சொல்லப்பட்டு வருகிறது.

Related articles

Recent articles

spot_img