கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். ‘பச்சை தமிழகம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இக்கட்சியின் அறிமுக நிகழ்ச்சி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பின்னர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
பதவிகளை பிடிக்கவோ, பணம் சம்பாதிக்கவோ அரசியலுக்கு வரவில்லை. சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம். மக்கள் விரோத கொள்கைகள் உடைய எந்த கட்சிகளுடனும் கூட்டணி வைக்கமாட்டோம். வேட்பாளர்கள் பட்டியலில் பெண்கள், இளைஞர்கள், தலித்துகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் அணுஉலை, மீத்தேன் திட்டம் என தமிழக மக்கள் மீது திட்டமிட்டு தீமைகள் திணிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். மக்களின் நலனுக்காக போராடும் கோரிக்கைகளை அரசியல் அளவில் எடுத்துச்சென்று தீர்வு காணும் வகையில் போராட்ட யுக்தியாகத்தான் கட்சியை தொடங்கியுள்ளோம்.
சிறுபான்மையினர், தலித் மக்களின் கோரிக்கைகளுக்காக நாங்கள் போராடுவோம். வளங்களை மீட்டெடுக்கவும், வாழ்வாதாரங்களை காக்கவும் போராடும் நாங்கள் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்க முயற்சி செய்வோம். என்று உதயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு உதயகுமார் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.


